×

வந்தவாசியில் 5 மணிநேரம் மின்வெட்டு: மக்கள் கடும் அவதி

வந்தவாசி: தமிழகத்தில் தற்போது தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மேலும் பெரும்பாலான இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்தால் அவற்றை துரிதமாக சரிசெய்ய அதிகாரிகள் முன்வருவதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.சமீபத்தில் ஆரணியில் மின்சாரம் இல்லாததால் விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நெற்பயிர்கள் கருகியது. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. மின்வெட்டு காரணத்தால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வந்தவாசி தாலுகாவில் வந்தவாசி அடுத்த பாதூர், அம்மணம் பாக்கம், வெள்ளியம்பாக்கம், கொட்டை உள்ளிட்ட நான்கு கிராமங்களில் நேற்று காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை திடீரென மின்சாரம் தடை ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர். குறிப்பாக பெண்கள் காலையில் குழந்தைகளுக்கு சமையல் செய்யமுடியாமல் தவித்தனர். விவசாய நில பணிகளும் பாதிக்கப்பட்டது. இந்த மின்வெட்டை போக்க ஓசூர், கீழ்கொடுங்கநல்லூர், துணை மின் நிலையங்களை சேர்ந்த ஊழியர்கள் துரிதமாக செயல்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். வந்தவாசியில் நேற்று பல்வேறு இடங்களில் மின்னல்தாக்கி மின்சாரம் தடைபட்டது. மேலும் கொட்டை கிராமத்தில் மின்னல் தாக்கிய டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்க மின் ஊழியர்கள் துரிதமாக செயல்படாததால் மின்சாரம் துண்டிப்பும் ஏற்பட்டது. இதேபோல் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக இரவு நேரங்களில் 30 நிமிடத்திற்கு மேலாக மின்தடை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

Tags : Vandavasi ,Tamil Nadu ,
× RELATED செயற்கை நுண்ணறிவு கருவி எதுவாக...