- ஈரோடு எஸ்பி
- ஈரோடு
- மனோகரன்
- ராஜா ராணி டிரேடர்ஸ்
- திமிரி நேரு பஜார்
- ரனிபெட் மாவட்டம்
- ஷீலா
- பார்த்திபன்
- நளின்
ஈரோடு: ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி நேரு பஜார் ராஜா ராணி டிரேடர்ஸ் உரிமையாளர் மனோகரன் (48). இவர் மனைவி ஷீலா, மகன்கள் பார்த்திபன், நளின் ஆகியோருடன் நேற்று மதியம் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது மனோகரன், கேனில் இருந்த மண்ணெண்ணெய்யை திடீரென்று தன் உடல் மேலும், மனைவி, மகன்கள் மீதும் ஊற்றினார். அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக நான்கு பேரையும் மீட்டு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர்விசாரணைக்காக, ஈரோடு டவுன் டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மனோகரன் அளித்த புகார் மனுவில் கூறியிருந்தாவது:
நான் அரிசி வியாபாரி. 2025 மே மாதம், ஈரோட்டை சேர்ந்த நந்தகோபால், தேவி, சதீஷ் ஆகியோர் என்னிடம் ரூ.19 லட்சத்துக்கு அரிசி கொள்முதல் செய்தனர். அப்போது, ரூ.4 லட்சம் கொடுத்தனர். ஒரு வாரத்தில் மீதி உள்ள ரூ.15 லட்சத்தை கொடுப்பதாக தெரிவித்தனர். ஆனால், இதுவரை பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இவர்கள் மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் என்ற பெயரில் தவெக வக்கீல் அணி மாவட்ட செயலாளர் அருண் தலைமையில் பல போலியான ஜி.எஸ்.டி. எண்களை எடுத்து கொண்டு என்னை போன்ற பல வியாபாரிகளை ஏமாற்றி மோசடி செய்து வருகின்றனர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோன்று, திருச்சி பாப்பாகுறிச்சி தேவி பாஸ்கர் ரைஸ் மில் உரிமையாளர் ராஜா அளித்த புகார் மனுவில்,“ஈரோட்டை சேர்ந்த நந்தகோபால், தேவி, லோகு, பகதூர் பாஷா ஆகியோர் 2024ம் ஆண்டு கணேஷ் டிரேடர்ஸ் பெயரில் ரூ.1 கோடியே 3 லட்சத்திற்கு என்னிடம் அரிசி கொள்முதல் செய்தனர். ரூ.18 லட்சம் மட்டுமே கொடுத்தனர். மீதி ரூ.85 லட்சம் இதுவரை வழங்கவில்லை. தவெக வக்கீல் அணி செயலாளர் அருண் தலைமையிலான இக்கும்பல் பல போலி ஜி.எஸ்.டி.எண்களை எடுத்து வியாபாரிகளை ஏமாற்றி மோசடி செய்து பணம் சம்பாதிக்கின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார். இதுகுறித்து தவெக நிர்வாகி அருண் கூறுகையில், ‘‘இந்த புகாருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் தவறு செய்திருந்தால் 2025ம் ஆண்டே புகார் தெரிவித்திருக்கலாம்’’ என்றார்.
