கோட்டைக்கு வந்தபோது தடுத்து நிறுத்தம்; தவெக அரசு சமூகநீதி அரசாக எங்களுக்கு தெரியவில்லை: திருநங்கைகள் குற்றச்சாட்டு

சென்னை: திருநங்கை மந்திரா சவுமியா என்ற யூடியூபர், திருநங்கைகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான செய்திகளைப் பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக புகார் அளித்தும் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், திருநங்கை மந்திரா சவுமியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகோரிக்கை மனுவைக் கொடுக்க திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் அனுஸ்ரீ உள்பட 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று தலைமைச் செயலகத்திற்கு வர முயன்றனர். அவர்களை போலீசார், போர் நினைவுச் சின்னம் அருகே தடுத்து நிறுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 பேர் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக காவல்துறையினர் சமாதானம் செய்தனர்.

இதற்கிடையே நிருபர்களிடம் திருநங்கைகள் கூறியதாவது:
முதல்வர் அல்லது அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க தலைமை செயலகத்திற்கு வந்தோம், ஆனால் போலீசார் எந்த காரணமும் சொல்லாமல் எங்களை தடுத்து நிறுத்தினர். இந்த மனுவில் திருநங்கைகளின் அனைத்து கோரிக்கைகளும் உள்ளன. தற்போதைய சமூகத்தில் திருநங்கைகள் முன்னேற்றத்திற்காக அத்தியாவசிய அனைத்து கோரிக்கைகளும் உள்ளன. மனு கொடுக்க வந்த எங்களை தடுப்பது சமூக நீதி இல்லை; இது அநீதி. சமூக நீதி அரசாக எங்களுக்கு இது தெரியவில்லை. எல்லாருக்குமான அரசு என்று சொல்லிவிட்டு எங்களை வஞ்சிப்பதும், சித்ரவதை செய்வதும் நியாயமா? மேலும் ஒரு திருநங்கை மொத்த திருநங்கை சமூகத்தையும் இழிவு செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories: