முதல்வரிடம் மனு கொடுக்காமல் செல்ல மாட்டேன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு

சென்னை: ஆளுநர் உரையுடன் நேற்று தமிழக சட்டப்பேரவை தொடங்கிய நிலையில், சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த பெண் ஒருவர், முதல்வரை நேரில் பார்த்து மனு கொடுக்காமல் செல்லமாட்டேன் என தெரிவித்து சட்டப்பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது காவல்துறையினர் இங்கு அமரக்கூடாது, முதல்வர் தனிப்பிரிவில் சென்று காத்திருங்கள் என தெரிவித்தனர். ஆனால், அவர் இங்கு வருவதற்கு எனக்கு உரிமை உள்ளது; நான் ஒரு ஓரமாக நிற்கிறேன்; முதல்வரை பார்க்காமல் செல்லமாட்டேன் என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு முதல்வரின் தனிப்பிரிவிற்கு சென்றார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
எனது மகன் சீனாவில் மருத்துவம் படித்து திரும்ப இந்தியா வந்த பிறகு, 2023ம் ஆண்டு மீண்டும் சீனாவில் பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற எனது மகனை காவல்துறையினர் தவறுதலாக கைது செய்துவிட்டனர். அவரை மீட்டுக் கொண்டுவர டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், தற்போது முதல்வரை நேரில் சந்தித்து அவரிடமே எனது மனுவை கொடுக்க வந்துள்ளேன் என கூறினார்.

Related Stories: