சேலம்: சேலத்தை சேர்ந்த வாலிபரிடம், ட்ரூலி மேட்லி ஆப்பில் திருமணம் செய்வதாக கூறி ஆன்லைன் முதலீடு செய்ய வைத்து, ரூ.34.84 லட்சம் மோசடி செய்த பெண் பற்றி, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (34) பெயர் மாற்றம்). இவர், ஓமன் நாட்டில் உள்ள தனியார் உருக்காலையில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அவரது பெற்றோர், குமாருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்துள்ளனர். இதே போல், குமாரும், ட்ரூலி மேட்லி என்னும் செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து, திருமண வரன் தேடியுள்ளார். அந்த ஆப்பில் நேகா சர்மா என்னும் இளம்பெண் குமாருக்கு அறிமுகமாகியுள்ளார்.
அவர், ‘தனக்கு இன்னும் திருமணமாகவில்லை’ எனக்கூறி ஆன்லைன் மூலம் பேசி வந்துள்ளார். அதில், இருவரும் நட்பாகி திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர். திருமணத்திற்கு பின் தங்களது வாழ்க்கை சிறப்பாக இருக்க, ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்க வேண்டும் என நேகாசர்மா, குமாரிடம் கூறியுள்ளார்.
இதற்காக ஒரு தனி இணையத்தை பரிந்துரை செய்து, அதில் குமாரை பண முதலீடு செய்ய நேகாசர்மா வைத்துள்ளார். முதலில் ரூ.5 ஆயிரம் செலுத்தியதும், ரூ.10 ஆயிரம் கணக்கில் இருப்பதாக காட்டியுள்ளது. இப்படியே, அடுத்தடுத்து குமார் பண முதலீடு செய்ய, அவரது கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதாக காட்டியிருக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், அந்த பணத்தை எடுக்க குமார் முயற்சித்துள்ளார். முடியவில்லை. நேகா சர்மாவிடம் கேட்டதற்கு, ‘11 சதவீதம் வரி செலுத்தினால்தான் எடுக்க இயலும்’ என கூறியுள்ளார். அவ்வாறே வரியை செலுத்தினார். அதற்கு பிறகும் பணத்தை எடுக்க முடியவில்லை.
இதனால் சந்தேகமடைந்த குமார், மீண்டும் நேகா சர்மாவை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, முடியவில்லை. அப்போதுதான், நேகா சர்மா தன்னை ஏமாற்றியதை குமார் உணர்ந்துள்ளார். 49 பரிவர்த்தனைகள் மூலம், ரூ.34.84 லட்சம் செலுத்தியுள்ளார். உடனே சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் குமார் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்தனர்.
குமாரிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட ரூ.34.84 லட்சமும் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த பணத்தை மீட்க, சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், இம்மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்யவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

