×

இரவு முழுவதும் மின் வெட்டு மக்கள் சாலை மறியலால் பதற்றம்: திருவள்ளூர் அருகே பரபரப்பு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் ஆவேசம் அடைந்த மக்கள், நள்ளிரவில் சாலை மறியல் நடத்தினர். திருவள்ளூர் அடுத்த மப்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட காந்திபேட்டை பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டுவந்ததுடன் அடிக்கடி மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இரவில் தூக்கமின்றி தவித்துவந்தனர். மின்மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் தவித்து வந்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

இதுதொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் 24 மணி நேரமும் சீரான மின்சாரம் கொடுக்கப்பட்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘’குடியிருப்பில் வசிக்கும் தங்களுக்கு முறையான மின்சாரம் வழங்காமல் தொழிற்சாலைகளுக்கு எவ்வித பிரச்னையும் இன்றி மின்சாரம் வழங்கப்படுவது எப்படி? ‘ என்று மக்கள் கேட்கின்றனர்.

இந்த நிலையில், மேற்கண்ட பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் மின்வெட்டை ஏற்பட்டதால் கோபம் அடைந்த பொதுமக்கள் நேற்றிரவு பூந்தமல்லி – அரக்கோணம் நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதன்காரணமாக பூந்தமல்லி-அரக்கோணம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் கைவிடும்படி கேட்டுக்கொண்ட போலீசாருடன் மக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் வந்து, ‘’ இன்றும் சில நாட்களில் மின்சார பிரச்னைக்கு தீர்வு காணப்படும்’’ என்று உறுதி அளித்ததால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.‘’திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. மின்வெட்டு பிரச்னை கண்டித்து பல்வேறு இடங்களில் மக்கள் சாலை மறியல் நடத்தி வருகின்றனர். மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : Tiruvallur ,Gandhipettai ,Mappedu panchayat ,Tiruvallur… ,
× RELATED செயற்கை நுண்ணறிவால் நேர்மை, ஒழுக்கம்,...