திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே விவசாயக் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டியை மீட்கச் சென்றபோது, கிணற்றுக்குள் இறங்கிய இளைஞர்களின் கையில் ராக்கெட் லாஞ்சர் சிக்கியது. சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் காலியாக இருக்கும் பகுதிகளில் நேற்று மாலை தையூர் பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், பிரவீன்குமார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களுடன் இருந்த நாய்க்குட்டி ஒன்று அங்குமிங்கும் ஓடி விளையாடியபோது, அங்கு தண்ணீர் இல்லாத ஒரு விவசாயக் கிணற்றுக்குள் திடீரென தவறி விழுந்தது.
இதைத் தொடர்ந்து, கிணற்றுக்குள் அரிகிருஷ்ணன் இறங்கி, நாய்க்குட்டியை மீட்க முயற்சித்துள்ளார். அப்போது, கிணற்றில் ஒரு ராக்கெட் லாஞ்சர் வெடிக்காத நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியானார். அந்த ராக்கெட் லாஞ்சரையும் நாய்க்குட்டியையும் பத்திரமாக மீட்டு அரிகிருஷ்ணன் மேலே கொண்டு வந்துள்ளார்.
தகவலறிந்த கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் போலீசார் வந்து அரிகிருஷ்ணனிடம் இருந்து ராக்கெட் லாஞ்சரை மீட்டு, தாம்பரத்தில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சோதித்து பார்த்த பிறகே ராக்கெட் லாஞ்சர்தானா அல்லது வேறு ஏதாவதா என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

