புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் எம்.எஸ்சி., எம்.பி.எச்., பி.பி.டி, பி.ஜி.டி., பி.ஜி.எப்., எம்.பி.ஐ.பி., ஆகிய பாடப்பிரிவுகளில் உள்ள 124 இடங்கள் ஜூலை 15ம்தேதி நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இப்பாடப்பிரிவுக்கு ஆன்லைனில் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்.எஸ்சி., அலைடு ஹெல்த் சயின்ஸ் பாடப்பிரிவில்-24, எம்.எஸ்சி. நர்சிங்-31, எம்.பி.எச். (மாஸ்டர் ஆப் பப்ளிக் ஹெல்த்)-34, பி.பி.டி.என் (போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் நர்சிங்)-19, பிஜிடி/பிஜிஎப்-12, எம்பிஐபி-4 என மொத்தம் 124 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் ஆன்லைன் முறையில் நுழைவுத்தேர்வு நடத்தி நிரப்பப்படுகிறது.
அந்த வகையில், 2026-27ம் கல்வி ஆண்டு மேற்கூறிய பாடப்பிரிவுகளுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 15ம்தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடக்கிறது. இப்பாடப்பிரிவுகளுக்கு ஜூலை 6ம் தேதி மாலை 4.30 மணி வரை மாணவர்கள் www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்த ஆன்லைன் நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஜூலை 10ம் தேதி மாலை 4.30 மணி முதல் 15ம் தேதி காலை 8 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான தேர்வு பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஐதராபாத், கொச்சின், கொல்கத்தா, மும்பை, டெல்லி, புதுச்சேரி ஆகிய 10 நகரங்களில் நடத்தப்படுகிறது.
இத்தேர்வு முடிவு மற்றும் தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 10ம்தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவே வெளியிடப்படும். இப்பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு ஜிப்மர் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
