ஸ்ரீ பெரும்புதூர் அருகே பரபரப்பு காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்; போலீசார் விசாரணை

 

 

ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீ பெரும்புதூர் அருகே வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் 7 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீ பெரும்புதூர் அருகே தத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(35), இவரது மனைவி நந்தினி. இவர்கள் குடும்பத்துடன் கீழ்தளத்தில் குடியிருந்து வரும் நிலையில், மேல் தளத்தில் புதிதாக மேலும் ஒரு வீட்டை கட்டிவந்தனர். கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், வயரிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென மேல் தளத்தில் புதிதாக கட்டி வந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேல் மாடியில் இருந்து பரவிய தீ, இவர்கள் குடியிருந்து வந்த கீழ் தளத்திற்கும் பரவத் தொடங்கியது. இதனை அறிந்த முருகன், நந்தினி, மாமியார் மற்றும் 2 பிள்ளைகளுடன் பின்பக்க கதவு வழியாக வீட்டை விட்டு வெளியேறினர். தொடர்ந்து விபத்து குறித்து ஒரகடம் போலீசருக்கும், ஸ்ரீ பெரும்புதூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அருகில் குடியிருந்து வந்தவர்கள், முருகனின் நண்பர்கள் என 5க்கும் மேற்பட்டோர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது, வீட்டில் இருந்த 2 காஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தீயை அணைக்க வந்த வடகால் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன், தத்தனூரை சேர்ந்த சைமன், விக்னேஷ், சரத், செல்வராஜ், திலகர், சிரஞ்சீவி உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் 2 பேர், ஸ்ரீ பெரும்புதூர் அரசு மருத்துவமனையிலும், 5 பேர் தண்டலம் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிரஞ்சீவிக்கு 60 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Related Stories: