திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சமீப காலமாக போலி சாமியார்கள் மற்றும் சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள் மூலம் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. மேலும் கிரிவலம் சென்ற பெண்களை நிர்வாணமாக்கி, பாலியல் தொல்லை கொடுத்து, நகை மற்றும் பணத்தை அபகரித்த கொடூர சம்பவம் சமீபத்தில் திருவண்ணாமலையில் அரங்கேறியது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் கொண்ட கும்பல், கஞ்சா போதை பழக்கத்தில் சிக்கியிருப்பவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் வீடுகளில் டவுன் போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கல்நகர் மற்றும் பாவாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன், சந்தேகத்துக்குரிய வீடுகளில் சோதனை நடந்தது. பல மணி நேரம் நடந்த சோதனையில், வீடுகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் கஞ்சா வைத்திருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.
