சட்டமன்ற உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமை முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த 17வது சட்டசபை தேர்தலில், தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 60 சதவீதத்திற்கும் அதிகமான எம்எல்ஏக்கள் புதுமுகங்கள் என்பதால், சட்டசபை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்க சபநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முடிவு செய்தார்.

அதன்படி, எம்எல்ஏக்களுக்கான 2 நாள் பயிலரங்கை முதல்வர் விஜய் நேற்று காலை சென்னை, கலைவாணர் அரங்கில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் அவை மரபுகள், சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 17வது சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் அர்லேகர் உரையுடன் நாளை (18ம் தேதி) கூட இருக்கிறது. அதற்கு முன்னதாக, இந்த புத்தாக்க பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சி முகாமில் தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது:
17வது சட்டப்பேரவைக்கு புதிய எம்எல்ஏக்களாக 146 ேபர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக இளைஞர்கள் அதிகம் பேர் இடம் பெற்றுள்ளார்கள். பேரவை நடவடிக்கைகள், சட்டமன்றத்தில் எதை பேசுவது, எதை பேசக்கூடாது, என்ன பேசினால் அவையில் பாராட்டுவார்கள், வெளியில் பாராட்டுவார்கள் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எம்எல்ஏக்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவதம் மூலம் ஒருவர் திறமையானவர்களாக மாற முடியும். இந்த சிறப்பு பயிற்சி 2 நாட்கள் அளிக்கப்பட உள்ளது. நாட்டு மக்கள் நம்மிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். இந்த அவையின் மூலம் ஒலிக்கும் குரல்தான் அரசுக்கும், நாட்டுக்கும் போய் சேரும்.

அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இந்த சபையில் பேசியது உள்ளிட்ட, சபையில் நடந்த வரலாற்றை நூலகத்தில் சென்று எம்எல்ஏக்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் கண்ணியமான, கவுரமான உரைகளை தயாரிக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், சபையின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும். இந்த அவையில் நிறைவேற்றப்படும் சட்டங்கள்தான் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது. நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வந்துள்ள அனைத்து எம்எல்ஏக்களையும் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த பயிற்சி முகாமில் தவெகவை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: