சென்னை: திருச்சி சூர்யா, முக்தார் அகமது ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். பாஜ விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அலிஷா அப்துல்லாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. குழந்தைகள் பிறப்பு குறித்து, யூடியூப் சேனல் ஒன்றில் யூடியூபர் முக்தார் அகமது மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் அவதூறு கருத்துகளை பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அலிஷா அப்துல்லா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த 4ம் தேதி யூடியூபர் திருச்சி சூர்யாவை திருச்சியில் அவரது வீட்டில் கைது செய்தனர்.
மற்றொரு யூடியூபரான முத்தார் அகமது தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில், முத்தார் கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் கர்நாடகா மாநிலத்தில் முகாமிட்டு யூடியூபர் முத்தாரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரையின்படி திருச்சி சூர்யா மற்றும் முக்தார் அகமது ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
