தேர்தல் வாக்குறுதியை மறந்து விட்டு தவெக அரசு மின் கட்டணத்தை உயர்த்த துடிப்பது சரியல்ல: பாமக கண்டனம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6 சதவீதத்துக்கு மிகாமல் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆணை மக்களை பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் என்றும், இது தொடர்பாக முதல்வர் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவின்படி, வரும் ஜூலை மாதம் முதல் மின்சார கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இது தொடர்பாக, கடந்த மாதம் 21ம்தேதி மின்சாரத்துறை அமைச்சர் கூறுகையில், ‘‘மின்சாரத் துறை இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். ஆனால், இப்போது அந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சார கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுப்போம் என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது.

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் மக்களுக்கு பாதிப்பில்லை என்பதே தவறான வாதம் ஆகும். எந்த வகையான மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அது மக்களை பாதிக்கவே செய்யும்.தவெக தேர்தல் அறிக்கையில், மாதம் ஒரு முறை மின்சாரம் கணக்கிடும் முறை அறிமுகம் செய்யப்படும், அடுக்குமாடி குடியிருப்பு, சிறு, குறு தொழில்களுக்கான மின்சார கட்டணம் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

ஆனால், அதை மறந்து விட்டு, திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆணையை காரணம் காட்டி மின் கட்டணத்தை உயர்த்த துடிப்பது சரியல்ல.எனவே, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை காரணம் காட்டி மின்சார கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொண்டு, கட்டண உயர்வு சுமையிலிருந்து மக்களை காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: