கும்மிடிப்பூண்டி அருகே கொடூரம்; 3 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை: பொதுமக்கள் மறியல்: பீகார் வாலிபர் கைது

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் தொடர் சம்பவங்களுக்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளிக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும், என்று கூறி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தையொட்டி உள்ள வாடகை வீடுகளில் பீகார், ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கி சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் 3 வயது குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையுடன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிபின் மஞ்சு (19) என்பவர் விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் திடீரென்று குழந்தை மாயமானது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனிடையே, வடமாநில நபர் ஒருவர் இயற்கை உபாதை கழிக்க மறைவான பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, முட்புதரில் குழந்தையின் கால்கள் அசைவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பெற்றோர் ஓடிச் சென்று பார்த்தபோது, முட்புதரில் குழந்தை ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்ட பெற்றோர் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலனஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த பிபின் மஞ்சுவை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் பிபின் மஞ்சுவை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இந்த சம்பவத்தை அறிந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கொன்ற பிபின் மஞ்சுவுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், என்று கோஷம் எழுப்பினர். அதன்பின் போக்சோ உள்பட 4 பிரிவுகளின் கீழ் பிபின் மஞ்சு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தையை சீரழித்த வடமாநில நபருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை 8 மணியளவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் பரவியது. இதனை அறிந்த பொதுமக்கள் புதுப்பேட்டை கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. புதுப்பேட்டை கிராமத்தில் இருந்து சிப்காட் பகுதி பாத்தபாளையம் செல்லும் சாலையை நோக்கி ஏராளமான பொதுமக்கள் சென்றனர். அவர்களை போலீசார் 3 இடங்களில் தடுத்து நிறுத்தினர். ஆனாலும், பொதுமக்கள் போலீசாரின் தடுப்பையும் மீறி சிப்காட் சாலையில் அமர்ந்து குழந்தைக்கு நீதி வேண்டும், என்று கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட பெண்களை கைது செய்து பேருந்தில் ஏற்றினர். இதனைக் கண்ட பொதுமக்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேருந்தில் ஏற்றிய பெண்களை கீழே இறக்கிவிட்டு தர்ணாவை கைவிடுமாறு பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், கும்மிடிப்பூண்டி பகுதியில் குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்கள் அதிகளவில் நடக்கிறது. அதனை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தவெக மற்றும் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், தவெக நிர்வாகிகளிடம் ‘‘நாங்கள் உங்களுக்கு ஓட்டு போட்டது பயனில்லை. உங்கள் ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகளவில் நடக்கிறது. இந்த சம்பவங்களால் நாங்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளோம். எங்கள் குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்’’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டம் நீடித்த நிலையில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி ராஜா, சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து விசாரித்தால் மட்டுமே தர்ணாவை கைவிடுவோம், என்று தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக வஜ்ரா வாகனத்தை வரவழைத்தனர். மேலும், தர்ணாவை கைவிட்டு கலைந்து செல்லாவிட்டால் தண்ணீரை பீய்ச்சி அடிப்போம், என்று போலீசார் மிரட்டினர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி கோட்டாட்சியர் அப்துல் மாலிக், ‘‘குழந்தையை சீரழித்து கொன்ற பிபின் மஞ்சுக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும், புதுப்பேட்டை பகுதியில் போலீஸ் புறக்காவல் மையம் அமைக்கப்படும் என்றும், போலீசாரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும், வடமாநிலத்தவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்’’ என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து, கோட்டாட்சியர் அப்துல் மாலிக், புதுப்பேட்டை பகுதிக்கு சென்று விசாரித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘புதுப்பேட்டை பகுதியில் நாளுக்கு நாள் வடமாநில இளைஞர்கள் அதிகளவில் குடியேறி வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதுபோன்று குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை செய்த நபர்களை நாங்கள் விரட்டி அடித்துள்ளோம். எனவே, வடமாநில நபர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக் கண்காணித்து பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரினர்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் கூறுகையில், ‘கடந்த ஆண்டு ஆரம்பாக்கம் பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் கும்மிடிப்பூண்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கும்மிடிப்பூண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தீவிர விசாரணை மேற்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்த வட மாநில இளைஞரை சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தார். திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 3 வயது குழந்தையை சீரழித்து கொன்ற வடமாநில இளைஞருக்கும் தூக்கு தண்டனை அல்லது என்கவுன்டர் செய்ய வேண்டும், என்றனர்.

இதனிடையே, பிரேத பரிசோதனை முடிந்து குழந்தையின் உடல் நேற்று மாலை புதுப்பேட்டை பகுதியில் உள்ள சுடுகாடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 3 வயது வடமாநில குழந்தை கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

காவலர்கள் பற்றாக்குறை
கும்மிடிப்பூண்டி சப் டிவிஷனுக்கு உட்பட்டு கும்மிடிப்பூண்டி, சிப்காட், பாதிரிவேடு, ஆரம்பாக்கம், கவரப்பேட்டை ஆகிய 5 காவல் நிலையங்கள் மற்றும் ஒரு மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகின்றன. இந்நிலையில், குற்ற சம்பவங்கள் அதிகரிப்புக்கு காவலர்கள் பற்றாக்குறை காரணமாக உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட வரையறுக்கப்பட்ட காவலர்கள் மட்டுமே தற்போது மேற்கண்ட காவல் நிலையங்களில் பணியில் உள்ளனர். தற்போது இருக்கும் விகிதாச்சார அடிப்படையில் காவலர்களின் எண்ணிக்கையை குறைந்தது. 90 முதல் 100 பேர் வரை ரோந்து பணி, காவல் நிலைய பணியில் ஈடுபட்டால் மட்டுமே இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க முடியும், என்றனர்.

டீன் விளக்கம்
அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தை காலை 7.30 மணிக்கு இறந்ததாக அறிவித்தோம். குழந்தையின் பெண் உறுப்பு பகுதி அனைத்தும் மோசமான நிலையில் இருந்தது. மேலும் ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. அதேபோல மலம் கழிக்கும் இடத்தில் இருந்தும் ரத்தம் வந்தது. மருத்துவமனைக்கு வந்த உடன் அனைத்து வகையான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மலம் கழிக்கும் இடம் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததால் குடல் சற்று வெளியில் எடுத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால் ஐசியூ-வில் வைத்தும் பலன் அளிக்கவில்லை’’ என்றார்.

என்கவுன்டர் செய்ய வேண்டும்
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இதே போன்று ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளியை என்கவுன்டர் செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களே இருக்க கூடாது. அவர்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என பொதுமக்கள் ஆவேத்துடன் கூறினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் வாக்குவாதம்: தவெக எம்எல்ஏ ஓட்டம்
கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார் புதுப்பேட்டை பகுதிக்கு சென்றார். அப்போது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 3 வயது குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்றார். அப்போது, உங்கள் ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு என்ன பதில், என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும், சம்பவம் நடந்த நேரத்திற்கு வராமல் இப்போது எதற்காக வந்தீர்கள், என்றனர். அதற்கு எம்எல்ஏ விஜயகுமார் தான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்த்தாகவும், குழந்தையின் உடல்நிலை குறித்து டாக்டகளிடம் கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார். ஆனாலும், பொதுமக்கள் அதனை ஏற்க மறுத்து எம்எல்ஏவிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து எம்எல்ஏ விஜயகுமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, பதில் ஏதும் கூறாமல் எம்எல்ஏ விஜயகுமார் காரில் ஏறிச்சென்று விட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தவெக நிர்வாகிகளுக்கு சரமாரி ‘டோஸ்’
மறியல் சம்பவத்தை கேள்விப்பட்டதும், அதிமுக நிர்வாகிகள் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள், இந்த சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். மேலும், தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் வந்தனர். அவர்களும், ‘குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறி பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். ‘உங்களை (தவெக) நம்பிதான் வாக்களித்தோம். ஆனால், குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறதே… நீங்கள் என்னதான் நடவடிக்கை எடுக்கிறீர்கள்’ என பொதுமக்கள் ஆத்திரத்துடன் கூறினார். இதனால் அவர்களும் வேறு வழியின்றி நைசாக தப்பித்தால் போதும் என நினைத்து அந்த இடத்தை விட்டு சென்று விட்டனர்.

சுடுகாட்டில் குவிந்த மக்கள்
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து குழந்தையின் உடலை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் உடலை அடக்கம் செய்ய புதுப்பேட்டை சுடுகாடுக்கு வருவதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் சுடுகாடுக்கு வந்தனர். நீண்டநேரமாகியும் குழந்தையிடன் உடல் சுடுகா வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் சிப்காட் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முருகேசன் (35) என்பவர் அருகே இருந்த உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி குழந்தையின் உடலை அடக்கம் செய்ய புதுப்பேட்டை சுடுகாடுக்கு ஏன் கொண்டு வரவில்லை என போலீசிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உயர் அழுத்த மின்கம்பிகளை பிடிக்க முயன்றார். பொதுமக்கள் முருகேசனை சமாதானம் செய்தனர். பிறகு அவர் கீழே இறங்கினார்.

இதனிடையே குழந்தையின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொன்னேரியில் உள்ள சுடுகாடுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு குழந்தைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: