வேலூர் சிறையில் உள்ள 2 கைதிகள் ஐடிஐ படிக்க விருப்பம்: திருச்சி சிறைக்கு மாறுகின்றனர்

 

வேலூர், ஜூன் 15: வேலூர் மத்திய சிறையில் இருந்து திருச்சி அரசு ஐடிஐயில் படிக்க 2 கைதிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தண்டனை பெற்று சிறையில் உள்ளோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு தொழிற்பயிற்சிகளை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 2015ம் ஆண்டு திருச்சி மத்திய சிறையில் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் ஐடிஐ தொடங்கப்பட்டது. இதற்காக நடப்பு கல்வியாண்டில் பிட்டர் 21, கணினி ஆபரேட்டர் 52, எலக்ட்ரீஷியன் 21, டெய்லரிங் 42, வெல்டர் 32 என மொத்தம் 168 கைதிகள் ஐடிஐயில் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர்.

அதன்படி, இந்தாண்டு புழல்-1, புழல்-2, மதுரை, வேலூர், சேலம், பாளையங்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 9 சிறைகளில் உள்ள தகுதியுடைய மற்றும் ஐடிஐயில் சேர்ந்து பயில விருப்பமுள்ள கைதிகளின் பட்டியலை சேகரித்து உடனடியாக அனுப்பி வைக்குமாறு சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கிடையில், வேலூர் மத்திய சிறையில் இருந்து 2 கைதிகள் திருச்சி அரசு ஐடிஐயில் படிக்க விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, விருப்பம் தெரிவித்த 2 கைதிகளின் கல்வி சான்றிதழ்கள் திருச்சி சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவர்கள் கல்வி சான்றிதழ் ஆய்வு செய்து, ஐடிஐயில் சேருவதற்கான அனுமதி கிடைத்ததும், 2 பேரை திருச்சி சிறைக்கு மாற்ற உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related Stories: