வேலூர், ஜூன் 15: வேலூரில் போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள போக்சோ குற்றவாளிகள் 22 பேர் ஆர்டிஓவிடம் உறுதிமொழி பத்திரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சில்மிஷம், சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்குவது, 18 வயதுக்கு குறைந்த பெண்களை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்வது, பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை பின் தொடர்வது உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2023ம் ஆண்டு முதல் கடந்த மே மாதம் வரை 22 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளிவந்தனர். சிலர் வழக்குகளில் சமரசம் ஆகி உள்ளனர். இந்த 22 பேரையும் வேலூர் ஆர்டிஓ முன்பு ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த விதமான குற்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது என உறுதிமொழி பத்திரம் வாங்கப்படும். அவர்களை போலீசார் தொடர்ந்து கண்காணிப்பார்கள் இவர்கள் மீண்டும் எந்தவித தவறும் செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
