திருமலை: ஆந்திராவில் வனப்பகுதியில் வளர்ப்பு நாயுடன் நடந்து சென்ற 2 வயது குழந்தை மாயமானார். அவரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் 500 போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆந்திரமாநிலம் காக்கிநாடா மாவட்டம் துனி கிராமப்புற மண்டலம் சி.எச். அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுங்கரா கணேஷ். இவரது மனைவி பவானி. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். கணேஷ், கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மாந்தோப்பில் காவலாளியாக உள்ளார். கடந்த 6ம் தேதி தனது மூத்த மகளான 2 வயது குழந்தை ஞானேஸ்வரியை அந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். உடன் தங்களது வளர்ப்பு நாயையும் அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் அங்கு நாயுடன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானார். பின்னர் வளர்ப்பு நாய் மட்டுமே திரும்பியது. பல இடங்களில் தேடியும் சிறுமி குறித்த தகவல் கிடைக்காத நிலையில் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் கடந்த ஒரு வாரமாக தேடிவருகின்றனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனிடையே வீடு திரும்பிய நாய், தொடர்ந்து விசித்திரமாக குரைத்து வந்தது. மேலும் அருகில் வருபவர்களை பாய்ந்து கடிக்க தொடங்கியது. எனவே யாரோ நாயை தாக்கி விரட்டிவிட்டு குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. கால்நடை மருத்துவர்கள் சிகிச்சைக்கு பிறகு நாய் குணமடைந்ததால் நேற்றுமுன்தினம் நாய்க்கு ஜிபிஎஸ் கருவியுடன் போலீசார் குழந்தையை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.
நாய் வீட்டிலிருந்து 6 கி.மீ. தூரம் அருகே உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிந்தது. அதன் நடமாட்டம் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டது. அப்போது வனப்பகுதியில் நாயை மற்ற நாய்களோ அல்லது வனவிலங்குகளோ தாக்கியதால் சோர்வடைந்தது. நேற்றுமுன்தினம் இரவு கால்நடை மருத்துவர் நாய்க்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்துவிட்டது.
இதுகுறித்து எஸ்பி பிந்துமாதவ் கூறுகையில், ‘குழந்தை காணாமல் போன பகுதியில் உள்ள மலைப்பகுதிகளுக்கு போலீசார் மூன்று முறை சென்றுள்ளனர். இதற்கிடையில், குழந்தை காணாமல் போன வனப்பகுதியில் மலைப்பாம்புகள் இருப்பதாக வனத்துறை கூறுகிறது. குழந்தையை ஏதேனும் விழுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதியில் மலைப்பாம்புகளும், காட்டுப்பன்றிகளும் உள்ளன. இதனால் தேசிய பேரிடர் மீட்பு படையினர், வனத்துறையினர் மற்றும் 400 போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்றார்.
