×

இரவு நேரத்தில் தொடர் மின்வெட்டு; திருவள்ளூரில் மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர்: இரவு நேர தொடர் மின்வெட்டு கண்டித்து திருவள்ளூர்-திருத்தணி சாலையில் கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் நிலவியது. திருவள்ளூர் அடுத்த சிறுவனூர் மற்றும் சிறுவனூர் கண்டிகை பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக் கின்றனர். இந்த பகுதிகளில் கடந்த 10 தினங்களாக இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக இந்த நிலை தொடர்கிறது.

இந்நிலையில் நேற்று இரவும் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், மின்சாரத்தை உடனே சரி செய்தால்தான் சாலை மரியாதை கைவிடுவோம் என கூறினர். இதனை தொடர்ந்து போலீசார், மின்வாரிய ஊழியர்களை சம்பவ இடத்துக்கு வரவைத்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு மின்சாரம் சரி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். தொடர் மின்வெட்டு காரணமாக திருவள்ளூர் – திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் நிலவியது.

Tags : Tiruvallur ,Tiruvallur-Thiruthani road ,Siruvanur ,Siruvanur Kandigai ,Tiruvallur… ,
× RELATED தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு...