தண்டையார்பேட்டை: தங்க காயின் தருவதாக ரூ.20 கோடி மோசடி செய்த வழக்கில், ராயபுரம் பெண் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து வடக்கு மண்டல இணை ஆணையர் உத்திரவிட்டுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ் பெக்டரின் டிரைவர் கைது செய்யப்பட்டார். ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஷீலா மேரி. இவர், கடந்த 3 வருடத்திற்கு முன்பு திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றினார். அப்போது இவர், விலை குறைவாக ஒரு கிராம் தங்கம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் ரூ.20 கோடி வரை ஏமாற்றியுள்ளார். இந்த விவகாரம் காவல்துறையினர் மத்தியில் சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பல காவல்துறையினர் புகார் கொடுக்காமல் இருந்தனர். ஒரு சில காவல்துறையினர் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்ததால், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், பெண் ஆய்வாளரின் கார் டிரைவர் பிரபு மணி என்பவரை குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவர், கொடுங்கையூர் பகுதியில் அலுவலகம் வைத்துள்ளார். இவரை நம்பி பணம் கொடுத்து முதலில் தங்க காயின் வாங்கி உள்ளனர். ஆசை அதிகமானதால் தங்க காயின் வாங்க அதிகளவில் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், பிரபுமணி தங்க காயின் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவானார். தங்க காயின் திட்டத்தில் பல போலீஸ் குடும்பத்தினர் சேரவும், பிரபுமணிக்கு உடந்தையாகவும் பெண் ஆய்வாளர் ஷீலா மேரி இருந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு பிரபு மணி கமிஷன் கொடுத்துள்ளார். இந்த பணத்தில் பிரமாண்ட திருமண மண்டபம், கல்குவாரி ஆகியவற்றை வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிரபு மணிக்கு உடந்தையாக செயல்பட்டதாக பெண் ஆய்வாளர் ஷீலா மேரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று ஆய்வாளரை கைது செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனிடையே, சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் மனோகரன் உத்தரவின்பேரில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏமாற்றிய வழக்கில் ராயபுரம் பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
