வைகை அணையில் இருந்து முதல் போக பாசன நீர் திறப்பதில் சிக்கல்: 45,000 ஏக்கர் சாகுபடி கேள்விக்குறி

 

ஆண்டிபட்டி: வைகை அணையின் போதிய தண்ணீர் இல்லாததால் இந்தாண்டு முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், 45041 ஏக்கர் நிலங்களில் சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயர வைகை அணை உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூல வைகை ஆற்றில் இருந்து வரும் நீர், போடி கொட்டகுடி ஆற்று நீர், முல்லைப்பெரியாற்றில் இருந்து திறந்துவிடப்படும் நீர் ஆகியவை இந்த அணையில் தேக்கப்பட்டு தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்தாண்டு மூல வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம் பகுதிகளில் போதிய மழை இல்லை. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகளவில் இல்லை. வைகை அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம், முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் மாதம் இரண்டாம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்தாண்டு தொடக்கம் முதலே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவாக அணையின் நீர்மட்டம் 20 அடி வரை குறைந்தது. இதனால், குடிநீருக்கு கூட தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

45,041 ஏக்கர் நிலங்கள் பாதிப்பு:
வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 1,797 ஏக்கர் நிலங்கள். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 16,452 ஏக்கர் நிலங்கள், மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் பாதியைக் கடந்த நிலையிலும், அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், வைகை அணை நீர்மட்டம் 20 அடியில் இருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது 26 அடியை எட்டியுள்ளது. நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வந்தாலும், நடப்பு ஆண்டில் முதல்போக பாசனத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததால், பாசனத்திற்கு நீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: