கள்ள மதுவிற்பனையை தடுக்க கோரி விஜய்க்கு கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த வாலிபர்

 

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் பிரபாகரன் (27). கடந்த சில மாதங்களாக மதுபோதைக்கு அடிமையாகி இருந்தார். அடிக்கடி மதுஅருந்தி வந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த பிரபாகரன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவலின் பேரில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் முதல்வர் விஜய்க்கு பிரபாகரன் எழுதிய வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அதில், விஜய் அண்ணா, சேந்தமங்கலம் பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை அதிகமாக உள்ளது. இதனால் சிறுவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர்.

இதனை தடுத்து நிறுத்த வேண்டும். கள்ளத்தனமான மது விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும். இதற்கு ஒரு நீதி வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: