×

சந்தேகம் இருந்தால் சான்றிதழை சரிபார்க்க வேண்டும் 21 வயது குறைந்தவர்களுக்கு மதுபானம் விற்க கூடாது: தமிழக அரசு உத்தரவு

சென்னை: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலம் முழுவதும் போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் சமூக பொறுப்புணர்வு மிக்க சூழலை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981-ன் கீழ் உரிமம் பெற்ற அனைத்து எப்எல் 2 மற்றும் எப்எல் 3 வளாகங்களிலும் பின்வரும் அறிவுறுத்தல்கள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்.

21 வயதிற்கு குறைவான எந்த நபருக்கும் மதுபானம் விற்க கூடாது. ஒருவரின் வயது குறித்து சந்தேகம் இருப்பின், வயதிற்கான செல்லுபடியாகும் ஆவண சான்றுகள் சரிபார்க்க வேண்டும். அனைத்து எப்எல் 2 உரிமம் பெற்ற கிளப்புகளும் தங்களது பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அவர்களது தகுதியுடைய விருந்தினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும்.

எப்எல் 2 உரிமம் பெற்ற கிளப்புகளில், பார் செயல்பாடு அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். கிளப் நிர்வாகங்கள், கிளப் நிறுவப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப பிற பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு மற்றும் சமூகச் செயல்பாடுகள் தொடர்ந்து மற்றும் பயனுள்ளதாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil ,Nadu ,Chennai ,Alcohol Abuse and Preparedness ,Tamil Nadu ,
× RELATED தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்; பாமக...