×

ரேஷன் கார்டு சிறப்பு முகாம்: வரும் 13ம் தேதி நடைபெறுகிறது

சென்னை: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வருகிற 13ம் தேதி (சனி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலை கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Food Supply and Consumer Protection Department ,Tamil Nadu ,
× RELATED பிரியாணியில் இறந்துபோன பூரான்...