சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமை மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 295 பேருந்துகளும், 13ம் தேதி (சனிக்கிழமை) 310 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 12ம் தேதி (வெள்ளிக் கிழமை) 55 பேருந்துகளும், 13ம் தேதி (சனிக்கிழமை) 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 12 மற்றும் 13ம் தேதி ஆகிய நாட்களில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 7446 பயணிகளும், சனிக்கிழமை 3161 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 7379 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
