×

திமுக தேர்தல் தோல்வி அறிக்கை சமர்ப்பிப்பு மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பரிந்துரை: முக்கிய முடிவுகளை எடுக்க உள்ள மு.க.ஸ்டாலின்

சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க பெரும்பான்மை இடங்களை பிடிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது. இந்த தோல்விக்கான உண்மையான காரணங்களை கண்டறிய தலைமை முடிவெடுத்தது. இதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 14ம் தேதி ஒரு முக்கியக் குழுவை அமைத்தார். இதில் மொத்தம் 36 நிர்வாகிகளை கொண்ட 19 குழுக்கள் உருவாக்கப்பட்டன. இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், தலைமை நிலைய செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் என பல முக்கிய பொறுப்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்த 19 குழுக்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் நேரடியாக சென்றன. அங்குள்ள உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தனித்தனியாக சந்தித்து பேசினர். தேர்தலில் என்ன நடந்தது, எங்கு தவறு நடந்தது என்பது குறித்த கருத்துக்களைக் கேட்டு, அதை தனித்தனி அறிக்கைகளாக தயார் செய்தனர். பல தொகுதிகளில் கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லை, என்று தெரிவித்தனர்.

சில இடங்களில் தி.மு.க. உட்கட்சி பிரச்சினையை சரி செய்யவில்லை என்ற கருத்துக்கள் இருந்தது. வெற்றி வாய்ப்புள்ள சில தொகுதிகளில் செல்வாக்கு உள்ள எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் சீட் வழங்காமல் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது தவறு என்றும் சுட்டிக்காட்டினர். காரணம் இன்றி வேட்பாளரை மாற்றியது, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வழங்கியதில் அதிருப்தி, தேர்தலின் போது சரிவர பணியாற்றாமல் ஒதுங்கி இருந்தது போன்ற பல்வேறு காரணங்களை கட்சி நிர்வாகிகள் எடுத்துக் கூறியிருந்தார்கள்.

இதை 19 குழுவினரும் தொகுதி வாரியாக அறிக்கையாக தயார் செய்து அந்த அறிக்கையை ஆழ்வார்பேட்டை சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில் இனி வரும் தேர்தல்களில் தி.மு.க. தனித்தே போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும்போது அந்த தொகுதியில் அவர்களுக்கு செல்வாக்கு இருக்கிறதா என்று கீழ்மட்ட அளவிலும் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தி.மு.க.வில் 2 சட்ட சபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளதை அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் அறிக்கை சமர்ப்பித்த நிர்வாகிகளிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஆலோசனையும் நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மற்றும் மூத்த நிர்வாகிகள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Tags : DMK ,MK Stalin ,Chennai ,President ,
× RELATED தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்; பாமக...