×

குற்ற வழக்குகளில் தண்டனையை எதிர்த்த மேல்முறையீடுகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தால் பரோல் வழங்க முடியுமா? சென்னை உயர் நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை

சென்னை: குற்ற வழக்குகளில் தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு, உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனது விசாரணையை தொடங்கியுள்ளது. குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் சார்பில், பல்வேறு காரணங்களுக்காக பரோல் வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

தண்டனையை எதிர்த்து இவர்கள் மேல்முறையீட்டு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, மேல்முறையீடு வழக்குகள் நிலுவையில் உள்ளபோது பரோல் வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள் வெவ்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, இதுதொடர்பாக முடிவெடுக்கும் வகையில் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து 2025ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எம்.நிர்மல்குமார், சுந்தர் மோகன் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில், மேல்முறையீடு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தமிழ்நாடு தண்டனை நிறுத்திவைப்பு விதிகளின் கீழ் கைதிக்கு உயர் நீதிமன்றமோ, அரசோ பரோல் வழங்க முடியுமா என்ற கேள்விகளுக்கு விடை காண்பது தொடர்பான விசாரணையை நேற்று தொடங்கிது.

அப்போது, பரோல் வழங்க உயர் நீதிமன்றத்துக்கும், அரசுக்கும் அதிகாரம் உள்ளதாக அனைத்து தரப்பினரும் தெரிவித்ததால், மாற்று கருத்து இருக்கிறதா என்று அறிந்துகொள்ளும் வகையில், நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் ஒருவரை நியமிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Madras High Court ,Chennai ,High Court ,Supreme Court ,
× RELATED தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்; பாமக...