×

மின்வெட்டை விரைந்து சீரமைக்கும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் 125 ரோந்து வாகனங்கள்

சென்னை: சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான அளவில் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடங்கல்களை விரைந்து சீர்செய்யும் வகையில் 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடக்கி வைத்தார்.

மேலும், ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள மின்னகம் நீங்கலாக 70 மின்தடை நீக்க மையங்களுடன் கூடுதலாக தற்போது 77 புதிய மின்தடை நீக்க மையங்கள் உருவாக்கப்பட்டு உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.  கூடுதலாக, 5 எம்.ஆர்.டி. சிறப்பு குழுக்கள், உயரழுத்த மின் புதைவட மின் கேபிள் பழுதுகளை உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்யும் உபகரணங்களுடன் கூடிய 4 சிறப்பு வாகனங்களும், உயரழுத்த மற்றும் அதிஉயரழுத்த மேல்நிலை கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய 7 வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் மூலம் போதிய அளவு மின்சாரம் கிடைக்கப்பெற்று வரும் நிலையில், சில நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் புதைவட கேபிள் பழுது, மின்மாற்றி கோளாறு, மின்பாதை துண்டிப்பு, மழை மற்றும் காற்று உள்ளிட்ட பருவநிலை காரணிகள், ஆர்.எம்.யூ. பழுது மற்றும் அதிஉயரழுத்த மின்மாற்றி பழுதுகள் போன்ற எதிர்பாராத காரணங்களால் அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை விரைவாக சரிசெய்து, நுகர்வோருக்கு தடையற்ற மின் விநியோகத்தை வழங்கும் நோக்கில் அமைச்சர் தலைமையில் கடந்த 9ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், இந்த 10 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கிய மின் தடைகள் மற்றும் பழுதுகளை நிகழ்நேரத்தில் கண்காணித்தல், பெரிய அளவிலான பழுதுகள் தொடர்பான தகவல்களை உடனடியாகப் பெறுதல் உள்ளிட்ட பணிகளை சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் மேற்கொள்ளும்.

Tags : Chennai ,
× RELATED தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்; பாமக...