×

டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து திட்டங்களின் இலக்கை எய்தும்படி செயல்பட வேண்டும்: அமைச்சர் மதன்ராஜா அறிவுறுத்தல்

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா தலைமையில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களுடன் துறை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்து ஆலோசனை, சென்னை கிண்டி சிட்கோ அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது அமைச்சர் மதன்ராஜா பேசுகையில், ‘ஒவ்வொரு திட்டத்திற்கான இலக்கினை அடைவது குறித்தும், கடந்த ஆண்டினை விட அதிக அளவில் பயனாளிகளை கண்டறிந்து தொழில் முனைவோர்களை உருவாக்குவது நமது சாதனையாக இருக்க வேண்டும்.

அதிக அளவில் விழிப்புணர்வு கூட்டங்களை அந்தந்த மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கும், மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிக எண்ணிக்கையில் கடன் வழங்கப்பட வேண்டும்.

தற்போது உள்ள திட்டங்களின் வாயிலாக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம், குறுந்தொழில்கள் முறைபடுத்துதல் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாக அதிகபடியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது நமது அரசினுடைய சாதனையாக இருக்க வேண்டும்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து திட்டங்களின் இலக்கினை எய்திடும் வகையில் துரிதமாக செயல்பட வேண்டும். ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட அனைத்து நிறுவனங்களும் உற்பத்தி தொடங்கிட வழிவகை செய்திட வேண்டும்,’ என்றார்.

இந்த கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழக செயலாளர் கார்த்திக், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் நிர்மல்ராஜ், இன்ட்கோசர்வ் நிர்வாக இயக்குநர் ராஜகோபால் சுங்காரா மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Madanraja ,Chennai ,District Industrial Centre General Managers ,CIDCO ,Guindy, Chennai ,Micro ,Small ,
× RELATED தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்; பாமக...