×

சிஎம்டிஏவில் 3 நாளில் 130 பைல்களுக்கு அப்ரூவல்: பல கோடி ரூபாய் கைமாறியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பு

சென்னை: சிஎம்டிஏவில் 3 நாளில் 130 பைல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மாமூல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை மாநகர எல்லைக்குள் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் கட்ட வேண்டும் என்றால் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் என்று அழைக்கப்படும் சிஎம்டிஏ அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து அனுமதி பெற வேண்டும். சிறிய வீடுகளுக்கு மட்டும் சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்றால் போதுமானது.

சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு சிஎம்டிஏவில் அனுமதி பெற வேண்டும். தேர்தல் நேரத்தில் ஏராளமான கட்டிடங்களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த விண்ணப்பங்களை அதிகாரிகள் அப்படியே வைத்திருந்தனர். பெரிய கட்டிடங்களைப் பொறுத்தவரை அமைச்சரின் அனுமதி தேவைப்படும் என்பதால், பைல்கள் அனைத்தும் அப்படியே இருந்தன.

கடந்த மே மாதம் 10ம் தேதி புதிய அரசு அமைந்தது. அப்போது விஜயுடன் சேர்த்து 10 பேர் பதவி ஏற்றனர். ஆனால் அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. சில நாட்கள் கழித்துத்தான் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் சிஎம்டிஏவில் உள்ள பைல்கள் அனைத்திதற்கும் அனுமதி கொடுக்க வேண்டாம்.

அப்படியே வைத்திருங்கள் என்று சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக இருந்த பிரகாஷிடம், தவெகவில் முதல்வருக்கு அடுத்த நிலையில், தற்போதைய அரசை நிர்வகிப்பதாக கூறப்படும் ஒரு அமைச்சர் போன் செய்து கூறியுள்ளார். ஆனால் சிஎம்டிஏவில் உள்ள ஒரு உயர் அதிகாரி, திடீரென ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் சிஎம்டிஏவில் உள்ள பைல்கள் அனைத்தையும் உடனடியாக அனுமதி அளிக்கும்படி உத்தரவுகள் பறந்தன.

இதனால் கீழ் மட்டத்தில் இருந்த அனைத்து பைல்களும் உயர் அதிகாரிகளின் டேபிளுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்படி 3 நாளில் 130 பைல்களுக்கு சிஎம்டிஏவில் உள்ள ஒரு உயர் அதிகாரி அனுமதி கொடுத்துள்ளார். ஒவ்வொரு பைலுக்கும் சதுர அடி கணக்கீடு செய்து, அமைச்சர் மற்றும் அதிகாரிக்கு என்று ஒரு குறிப்பிட்ட அளவு கொடுக்க வேண்டும் என்று ஒரு உயர் அதிகாரி லஞ்சம் வாங்கி குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 3 நாளில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூலித்துள்ளார். அதில் ஆழ்வார்பேட்டையில் ஒரு ஓட்டல் இடிக்கப்பட்டு வர்த்தக கட்டிடங்கள் பெரிய அளவில் கட்ட அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்ட அனுமதி கேட்டுள்ளதால், கடந்த ஆட்சியின்போது அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. அந்த பைலுக்கு மட்டும் ரூ.30 சி வாங்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனம்தான், சென்னை கோயம்பேட்டில் ஒன்றரை ஏக்கர் கோயில் நிலத்தை மடக்கி அடுக்குமாடி குடியிருப்பை கட்டியிருந்தது. இந்த இடத்திற்கு பதிலாக புதிய இடத்தை அந்த நிறுவனம் வாங்கிக் கொடுத்து விட்டு, கோயம்பேடு இடத்தை அரசிடம் இருந்து வாங்கியுள்ளதற்கும் இவர் அனுமதி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காகவும் பெரிய அளவில் பணம் கைமாறியுள்ளது.

இவ்வாறு 3 நாளில் 130 பைல்களுக்கு அனுமதி அளித்து சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், ஆழ்வார்பேட்டையில் உள்ள குறிப்பிட்ட அந்த நிறுவன கட்டிடத்துக்கு அனுமதி அளித்துள்ள விவகாரம், தவெகவில் உள்ள பவர்புல் அமைச்சருக்கு தெரியவந்ததும், அந்த அதிகாரியை டிஆர்ஓ அந்தஸ்திலான டம்மியான பதவிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளாராம். இந்த விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் 3 நாளில் 130 பைல்களுக்கு அனுமதி அளித்தது குறித்து உயர்மட்ட விசாரணையும் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Tags : CMDA ,Chennai ,
× RELATED தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்; பாமக...