திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை: குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் தொழிற்சாலை கழிவுகள் பிரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பழைய பொருளை சேகரித்து வைக்கும் குடோனை ராஜா என்பவர் நடத்தி வருகிறார். இதில் வடமாநிலத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை திடீரென பழைய பொருளை சேகரித்து வைத்த குடோனில் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்டதும் அங்கு இருந்த ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்கடங்காமல் குடோன் முழுவதும் எரிய தொடங்கியதை அடுத்து ஊழியர்கள் வெளியேறினார்கள். பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் கவர், இரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க கடந்த அரை மணி நேரத்திற்கு மேல் போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் தீயை அணைப்பதற்கு போதிய தண்ணீர் இல்லாததால் டேங்கர் லாரி மூலம் தண்ணீர்கள் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கிடங்கில் அதிக பொருட்கள் இருப்பதால் யாராவது தீ வைத்ததால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது இந்த கிடங்கில் பணிபுரியும் ஊழியர்கள் பொருட்களை எரிக்கும் போது தீ பரவியதா என்று திருமுடிவாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: