ஜல்லி, மணல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் – லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: ஜல்லி மற்றும் மணல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் கேட்டு கொண்டுள்ளது. இது தொடர்பாக பேசிய லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜா, டீசல் விலை உயர்வு மற்றும் ராயல்டி அதிகரிப்பால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது என்றார்.

ஆனால் டீசல் விலை உயர்வை காரணமாக சொல்வது எப்படி? ஏனென்றால் நாங்கள் தான் ஜல்லி மற்றும் மணல் எடுத்து செல்கிறோம். அப்படி பார்த்தால் நாங்கள் தான் வாடகையை உயர்த்த வேண்டும். ஆனால் நாங்கள் இதுவரை வாடகையை உயர்த்துவது அல்லது இது தொடர்பாக நோட்டிஸ் அனுப்புவது என்று எதையும் செய்யவில்லை.

அதே போல கிரஷர் உரிமையாளர்களுக்கும், டீசலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர்கள் மின்சாரம் தான் அதிகமாக பயன்படுத்துவார்கள். ஆகவே எதற்காக இப்போது விலையை உயர்த்த வேண்டும் என்று கேள்வி எழுப்பி இந்த தற்காலிக விலை உயர்வு கூட இருக்க கூடாது, இப்படி கட்டுமான பொருட்களின் விலையை தற்போது உயர்த்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறி இருக்கிறார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ரூ.3,300க்கு விற்கப்பட்ட யூனிட் ஜல்லி ரூ.500 உயர்ந்து ரூ.3,800க்கு விற்பனையாகிறது. ரூ.4,000க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.500 உயர்ந்து ரூ.4,500க்கும். ரூ.5,000க்கு விற்கப்பட்ட யூனிட் பி.சாண்ட் ரூ.500 உயர்ந்து ரூ.5,500க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: