ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே வண்டலூர் பகுதியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர், தன்னுடன் படிக்கும் 3 மாணவிகளிடம் தனித்தனியாக காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழகி, அவர்களை ஓட்டல் மற்றும் விடுதிகளுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில், அந்த 3 கல்லூரி மாணவிகள் உல்லாசமாக இருந்த தனது செல்போனில் வீடியோவாகவும் அந்த மாணவர் பதிவு செய்து, தனது சக நண்பர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, அக்கல்லூரி முழுவதிலும் அந்த உல்லாச வீடியோ வைரலாகப் பரவி, மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் உறவினர் ஒருவர், அந்த மாணவரை அழைத்து பேசி, அந்த வீடியோக்களை தன்னிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், அந்த மாணவன் உல்லாச வீடியோக்களை முற்றிலும் அழிப்பதற்கு, சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினரிடம் பெருந்தொகையை கேட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்த மாணவரை மணிமங்கலம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கரசங்கால் பகுதியில் வந்து பணத்தை வாங்கிக் கொள்ளும்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் கூறி அழைத்துள்ளார். அங்கு சக நண்பர்களுடன் வந்த கல்லூரி மாணவனை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் சரமாரி தாக்க முயற்சித்ததால், இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்ததும் மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், சம்பந்தப்பட்ட கல்லூரியில் படிக்கும் 3 மாணவிகளுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ, அந்த கல்லூரி மாணவரின் செல்போனில் பதிவாகியிருப்பதை போலீசார் கண்டறிந்தனர். மேலும், அம்மாணவனின் பெற்றோரை அழைத்து விசாரித்தனர். விசாரணையில், அந்த மாணவர் தவெக நிர்வாகியான முக்கிய புள்ளி ஒருவரின் மகன் என்பதும் தெரியவந்தது. பின்னர் புகார் அளிக்க வந்திருந்த பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் உறவினரிடம், குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி மாணவருக்கு ஆதரவாக போலீசார் சமரசம் பேசி, அந்த கல்லூரி மாணவியை மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர்.
இதில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் இவ்விஷயம் வெளியே தெரிந்தால் உன் வாழ்க்கையே பாழாகிவிடும். அதனால் சம்பந்தப்பட்ட மாணவன்மீது புகார் அளிக்க வேண்டாம் என்று போலீசார் கூறி, குற்றம் சாட்டப்பட்ட மாணவனின் குடும்பத்தினரிடம் ரூ.50 லட்சம் வாங்கிக்கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது உறவினரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், தங்களின்மீது பழி வராமல் இருப்பதற்காக, ஒரு பழைய குற்றவாளிமீது பெயரளவுக்கு மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மணிமங்கலம் காவல்நிலைய அதிகாரி பேசுகையில், அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை. கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரிக்கிறோம் என்று தெரிவித்தார். இதுபோன்ற சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்று சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரி கூறுவது, சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பதை போலிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி, மணிமங்கலம் காவல் நிலையத்தில் நீண்ட காலமாக வேலை பார்த்து வருகிறார். அவர் தனது காவலநிலைய கட்டுப்பாட்டில் நடைபெறும் முக்கிய சம்பவம் குறத்து தாம்பரம் மாநகர காவல் ஆணையருக்கு உண்மையான தகவல்களை தெரிவிக்காமல் மறைத்து வருகிறார் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
