விழுப்புரம், ஜூன் 8: தமிழகத்தில் வீ த லீடர் என்ற புதிய இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலையிடம் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஐக்கியமாகி வருகின்றனர். மேலும் பாஜகவை சேர்ந்த 90% பேர் அண்ணாமலையிடம் வந்து விடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பாஜகவில் முக்கிய அங்கமாக செயல்பட்டு வந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை சமீப காலமாகவே கட்சியிலிருந்து ஓரம் கட்டி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.
தனது ராஜினாமா கடிதத்தை தேசிய தலைவர் நிதின் நபினிடம் அளித்த நிலையில் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்தும் பதவி விலகுவதற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்தார். பதவி விலகிய அடுத்த சில மணி நேரங்களிலேயே வீ த லீடர் என்ற புதிய இயக்கத்தை தொடங்கினார். இது அரசியல் இயக்கமாகவும் அடுத்து வரும் பொது தேர்தல்களில் அவரது இயக்கம் போட்டியிடும் என்று கூறியிருந்தார். அண்ணாமலை தொடங்கிய புதிய இயக்கத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அவரது இயக்கத்தில் ஐக்கியம் ஆகி வருகின்றனர். மாநில துணைத்தலைவராக உள்ள விழுப்புரத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி சம்பத் தனது ஆதரவாளர்களுடன் அண்ணாமலை இயக்கத்தில் இணைந்து உள்ளதாக தெரிவித்துள்ளார். பாஜகவில் உள்ள யாரும் அண்ணாமலை இயக்கத்திற்கு செல்லக்கூடாது என்று தற்போதைய மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் உத்தரவிட்டும் அவரது உத்தரவை மீறி பல நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர்.
இது குறித்து ஏஜி சம்பத்யிடம் கேட்டபோது, அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கிய அடுத்த சில மணி நேரத்திலேயே நானும் என்னுடைய ஆதரவாளர்களும் இணைந்து விட்டோம். பாஜகவில் உள்ள 90% நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணாமலை இயக்கத்திற்கு வந்து விடுவார்கள், என்றார். இதனிடையே அண்ணாமலை தொடங்கிய புதிய இயக்கம் பாஜகவின் மாற்று முகத்தோடு தமிழகத்திற்கு வந்திருப்பதாக இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
