குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை சட்டம்-ஒழுங்கை காப்பதில் அலட்சியம் இருக்க கூடாது: அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் எந்தவித அலட்சியமும் இருக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை மேலும் வலுப்படுத்துவது, குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது மற்றும் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் உள்துறை தொடர்பான முக்கிய நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். குறிப்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் அன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழல் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட வாரியாக பதிவான குற்றச் சம்பவங்கள், அவற்றின் தன்மை, விசாரணையின் தற்போதைய நிலை மற்றும் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட முக்கிய குற்றச் சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை ஒடுக்குதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல். குற்றச் சம்பவங்கள் குறித்து காவல்துறை உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் எந்தவித அலட்சியமும் இருக்கக் கூடாது, குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான மற்றும் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: