கந்தக குவியலில் திடீர் தீ விபத்து தலைமை செயலகத்தை சுற்றி ரசாயன புகைமூட்டம்: கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் மக்கள் அவதி

சென்னை: சென்னை துறைமுகத்தில் குவித்து வைக்கப்பட்ட கந்தக குவியலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் தலைமை செயலகத்தை சுற்றி அடர்ந்த வெண்புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சிதிணறல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர். சென்னை, தலைமை செயலகம் எதிரே துறைமுகம் உள்ளது. இங்கு வெளிநாடுகளிலிருந்து கப்பல்கள் மூலம் கொண்டுவரப்படும் நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு தற்காலிகமாக குவித்து வைக்கப்படுவது வழக்கம்.

அதேபோன்று வேதிப்பொருளான கந்தகம் (சல்ஃபர்) உள்ளிட்ட வேதிபொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டு குவிக்கப்பட்டு இருக்கும். நேற்று 11.05 மணியளவில் அதிக வெப்பம் காரணமாக கந்தக குவியலில் வேதிவினை ஏற்பட்டு திடீரென புகைமூட்டம் ஏற்பட்டது. நண்பகல் 12.05 மணியளவில் இந்த புகைமூட்டம் காற்றின் மூலம் வேகமாகப் பரவி, தலைமைச் செயலகம், ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை முழுவதையும் மேகமூட்டம் போலச் சூழ்ந்தது.

அடர்த்தியாக பரவிய இந்த புகை மூட்டத்தால், சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத் திணறல், இருமல், நெஞ்சு எரிச்சல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல், குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகினர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மக்கள், முகத்தில் கைக்குட்டைகளைக் கட்டிக்கொண்டும், கார்களின் கண்ணாடிகளை முழுமையாக மூடிக்கொண்டும் அப்பகுதியைக் கடந்து சென்றனர்.

குறிப்பாக, தலைமைச்செயலகத்தின் வெளிப்பகுதிகளில் போலீசார், பொதுமக்கள் ஏராளமானோர் இருந்தனர். அதேபோன்று அலுவலக ஊழியர்களும் அந்த பகுதியில் இருந்தனர். இந்த புகைமூட்டதால் அவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதுடன், சுவாசிக்கவும் சிரமப்பட்டனர். காவலுக்கு இருந்த போலீசார் முகத்தில் கைக்குட்டையை கட்டிக் கொண்டு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக துறைமுகத்தில் இருந்த கண்டெய்னர் ஒன்றில் இருந்து இந்த வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் துறைமுக வளாகத்தில் கொட்டப்பட்டு இருந்த கந்தகம் தீப்பிடித்து எரிந்ததால் வாயு கசிவு ஏற்பட்டதாக தெரிந்து. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர். உயர்நீதிமன்றம், திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் வந்தனர். அவர்கள் விரைந்து வந்தாலும், புகைமூட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திகைத்தனர். மேலும், துறைமுகத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் மூலம் தீயை அணைக்கும் பணி சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்று வந்தது.

தீ ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், புகை வெளியேறுவதை தீயணைப்பு வீரர்களால் தடுக்க முடியவில்லை. இதனால், துறைமுகத்தில் பணிபுரிந்த ஊழியர்களும் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நடக்கும்போது முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ரசாயன புகை சம்பவத்தைத் தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், இந்த நச்சுக்காற்று மேலும் பரவியிருந்தால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. எனவே, சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதனிடையே, வெப்பம் காரணமாக வேதியல் மாற்றம் அடைந்து சல்பர் வாயு கசிந்தது என சென்னை துறைமுகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றில் வாயு கலந்து இருப்பதால் பெரிய அளவிற்கு பாதிப்பு இருக்காது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாயு கசிவை தீயணைப்பு படை வீரர்கள் சரி செய்தனர்.

* 7 நாட்கள் வரை காற்றின் தரம் கண்காணிப்பு
சென்னை துறைமுகத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடமாடும் சுற்றுச்சூழல் ஆய்வக வாகனம் மற்றும் நடமாடும் காற்றுத் தர கண்காணிப்பு நிலையம் (மொபைல் யூனிட்) துறைமுக வளாகத்திற்குள் அனுப்பப்பட்டது. பொதுவாக இதுபோன்ற வாயுக் கசிவு சம்பவங்கள் நிகழும் போது, சம்பவ இடத்தில் இந்த வாகனங்கள் 24 மணி நேரமும் நிறுத்தி வைக்கப்பட்டு, காற்றின் தரம் மற்றும் அதில் நச்சு வாயுக்கள் கலந்துள்ளனவா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசுபாட்டின் தாக்கம் எவ்வளவு உள்ளது என்பதையும் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். முதற்கட்டமாக 24 மணி நேர ஆய்வுகள் நிறைவடைந்த பிறகு, மூன்றாவது நாளிலும் மீண்டும் காற்றுத் தர பரிசோதனை நடத்தப்படும்.

அதனைத் தொடர்ந்து, ஏழு நாட்கள் கழித்து இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சம்பவத்தின் தாக்கம் மற்றும் காற்றுத் தர நிலை தொடர்பான விரிவான அறிக்கையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பிக்கும். வாயுக் கசிவால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: