வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காதீர்கள் தம்பி விஜி: முதல்வருக்கு ஆர்பி உதயகுமார் அட்வைஸ்

 

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: தமிழகத்திற்கு எந்த உழைப்பும் கொடுக்காமல், எந்த போராட்டத்தையும் முன் எடுக்காமல், தேர்தல் களத்தை சந்தித்து தம்பி விஜி அதிகாரத்துக்கு வந்துள்ளீர்கள். இப்போது வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறீர்கள். இளைய தலைமுறையினருக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் என்னதான் வழி காட்டினீர்கள்? சிறு வயது முதல் சினிமாத் திரைப்படங்களில் நடித்து, அதன்மூலம் தனியாக விமானத்தில் பயணம் செய்யும் அளவுக்கு உங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டீர்கள். தமிழ்நாடு மக்களுக்கு என்ன தியாகம் செய்தீர்கள்?

திருச்சியில் நன்றி அறிவிப்பிற்கு வந்தீர்கள் சரி. அந்த மக்களுக்கு நீங்கள் சொன்ன செய்தி என்ன? மேகதாது பிரச்னை உள்ளது. பயிர்க்கடன் பிரச்னையில் விவசாயிகள் போராட்ட களத்தில் உள்ளார்கள். பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. மின்சாரத் தடை, போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. இதையெல்லாம் 25 நாட்களில் சீர்செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. இதற்கு எல்லாம் தீர்வு காண என்ன திட்டம் உள்ளது என்பதை சொல்ல வேண்டாமா?

இன்னும் நடிகராக தமிழ்நாட்டு மக்களிடத்தில் நடித்துக் கொண்டே இருந்தால், எப்போது முதல்வராக பொறுப்பேற்க போறீங்க? முதல்வர் என்பதை மறந்து, நடிகராகவே விமர்சனம் செய்கிறீர்களே? அதிமுகவை கிள்ளுக்கீரையாக நினைத்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறீகள். அதிமுகவை அழிக்க நினைக்கிறீர்கள். உங்கள் ஆணவம், அகம்பாவம் பேச்சு மூலம் தெரியுது தம்பி. அதிமுகவின் சிங்கக்கூட்டம் சிலிர்த்து எழுந்து, உங்களை செதில், செதிலாக்கும் காலத்தை உருவாக்குவார்கள்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார். இன்னும் நடிகராகவே இருக்கீங்க… எப்போது முதல்வராக பொறுப்பேற்க போறீங்க?

Related Stories: