×

சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி நெல்லை அருகே நள்ளிரவில் காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

*போலீசார் பேச்சு வார்த்தையில் சமரசம்

நெல்லை : சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி விகேபுரத்தில் காலி குடங்களுடன் நள்ளிரவில் பெண்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் விகேபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வார்டுகளுக்கும் ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விகேபுரம் நகராட்சிக்குட்பட்ட டாணா அனவன் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நேற்று நள்ளிரவு காலி குடங்களுடன் அப்பகுதியில் உள்ள சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த விகேபுரம் எஸ்ஐ சத்யா சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சீரான குடிநீர் வழங்க நகராட்சி ஆணையரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் கூறுகையில், எங்கள் பகுதியில் அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இது பல பகுதிகளுக்கு சீராக குடிநீர் கிடைப்பதில்லை. வரும் காலங்களில் சீரான குடிநீர் வழங்கவில்லை என்றால் மக்களை திரட்டி நகராட்சி முன் போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

அதிகாலையில் குடிநீர் விநியோகிப்பதால் பெண்கள் அவதி

விகேபுரத்தில் டாணா, பொதிகையடி, அனவன்குடியிருப்பு பகுதியில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு முன்னரே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் விகேபுரம் மற்ற பகுதிகளில் காலை 6 மணிக்கு பிறகு தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒரு பகுதியில் மட்டும் அதிகாலை நேரத்தில் தண்ணீர் விநியோகிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இன்றளவு அதிகாலை நேரங்களில் தண்ணீர் திறப்பதால் அப்பகுதி பெண்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தண்ணீர் பிடிப்பதற்காக சீக்கிரம் தினமும் எழுந்து விடுவதால் வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் அனைவரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி காலை நேரத்தில் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Nellai ,Vikepuram ,Vikepuram Municipality ,
× RELATED கடந்த 3 ஆண்டுகளாக மே மாதத்தில்...