×

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5ல் நெல்லையில் 1200மீ நீளம் தேசிய கொடி ஏந்தி விழிப்புணர்வு பேரணி

*தாமிரபரணியை பாதுகாக்க நடக்கிறது

நெல்லை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லையில் சமூக மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் தாமிரபரணியை பாதுகாக்க வலியுறுத்தி தேசியக்கொடி ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர் முத்துராமன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: உலக சுற்றுச்சூழல் தினம் வருகிற ஜூன் 5ம்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

இயற்கை சூழலை பாதுகாத்து நாம் மட்டுமல்ல நம் வருங்கால சந்ததியினரும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலில் வாழ வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாகும். இயற்கை காடுகள், ஆறுகளை பாதுகாக்கும் கடமையை குடிமக்கள் அனைவருக்கும் அரசியல் சாசனம் வழங்கி உள்ளது.

நெல்லை மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்கும் பொருட்டு மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்கக்கூடிய தாமிரபரணி நதியினை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஒரு சாதனையாக 1200 மீட்டர் நீளம் கொண்ட மூவர்ண இந்திய தேசியக்கொடி ஏந்தி செல்லும் மாபெரும் விழிப்புணர்வு பேரணி ஜூன் 5ம்தேதி காலை 6 மணிக்கு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கம் எதிர்புறம் அமைந்துள்ள பார்வைத்திறன் குறைபாடு உள்ளோர் பள்ளி மைதானத்தில் இருந்து தொடங்குகிறது.

இப்பேரணி மாவட்ட நூலகம் வழியாக சேவியர் கல்லூரி விடுதி வழியாக சென்று மீண்டும் அதே மைதானத்தை வந்தடைகிறது. இயற்கையோடு தேசப்பற்றையும் இணைத்து இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் துறையும் இந்த நிகழ்வை வரவேற்று அதனை தனது இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது.

நெல்லை மாவட்ட இளைஞர்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பெண்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை ஒரு வரலாற்று சாதனையாக பதிவு செய்ய வேண்டுகிறோம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணம் ஏதும் கிடையாது. பங்குபெறும் அனைவருக்கும் மரக்கன்று, விதை, பேனா மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

தன்னார்வலர்கள் நடைப்பயிற்சி அமைப்பில் உள்ளவர்கள், மாரத்தான் அமைப்பில் உள்ளவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் குழுவாக பங்கேற்கலாம். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை சமூக மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை செய்து வருகின்றது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.பேட்டியின் போது சமூக மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் பாஸ்கரன். சமூக ஆர்வலர்கள் முருகேசன், அருணாச்சலம், செந்தூர்பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : World Environment Day ,Nellai ,Social and Nature Conservation Foundation ,Muthuraman… ,
× RELATED இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து