*அருவிகள் வறண்டு கிடப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
நெல்லை : கடந்த 3 ஆண்டுகளாக மே மாதத்தில் குற்றாலம் களைகட்டிய சூழலில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு கண்ணாமூச்சி காட்டுவதால் சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஐந்தருவியில் மட்டும் ஆண்கள் பகுதியில் சிறிதளவு தண்ணீர் விழும் நிலையில், மெயினருவி, பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவை வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவக்காற்று வீசுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மே மாதத்திலேயே குற்றாலம் சீசன் துவங்கியது. ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் பிறந்தும் குற்றாலத்தில் இன்னும் சாரல் பெய்யவில்லை.
கேரளாவில் கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வளவாக மழை இல்லை. இதனால் குற்றாலம் பகுதிகளில் சீசன் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மெயினருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகியவை தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகிறது.ஐந்தருவியில் மட்டும் ஆண்கள் பகுதியில் சிறிதளவு தண்ணீர் விழுகிறது. அருவிகளில் தண்ணீர் இல்லாத நிலையிலும் காற்று நன்றாக வீசுவதால் கோடை வெயிலின் தாக்கம் தென்காசி, குற்றாலம் பகுதியில் சற்று குறைந்து காணப்படுகிறது.
இதனிடையே குற்றாலம் மெயினருவி பாதுகாப்பு வளைவு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. சீசன் துவங்குவதற்குள் சுற்றுலாத்துறை மெயினருவி பாதுகாப்பு வளைவு உள்ளிட்ட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
