ஆட்சியும், அதிகாரமும் எப்போதும் சொந்தமாக இருக்காது; ‘கைக்கூலிகளை வைத்துக்கொண்டு அதிமுகவினரை விலை பேசாதீங்க…’ முதல்வர் விஜய்க்கு ஆர்பி.உதயகுமார் எச்சரிக்கை

மதுரை: முதலமைச்சர் விஜய், கைக்கூலிகளை வைத்துக் கொண்டு அதிமுகவினரை விலை பேச வேண்டாம். ஆட்சியும், அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக இருக்காது என முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது: எந்த பதவி சுகத்தையும் அனுபவித்திடாத எங்கள் உயிர் மகேந்திரன், அதிமுகவை காத்திட தன் உயிரை தியாகம் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி எங்கள் உயிரிலும் மேலான தலைவர் என்ற உணர்ச்சி கொந்தளிப்பில், இப்போது விசுவாச தொண்டன் மகேந்திரனின் உயிரை நாங்கள் இழந்திருக்கிறோம். இனிமேலாவது ஆட்சி அதிகாரத்திலே இருக்கின்ற, ஆட்சி அதிகாரத்தை புதிதாக பார்க்கின்ற, முதல்வர் விஜய், பதவி, அதிகாரம், பணத்தை காட்டி அதிமுகவின் விசுவாசமிக்க உண்மை தொண்டர்களை விலை பேச முடியாது என்பதை, இந்த உயிர் தியாகம் மூலம் உணர்ந்து இருப்பீர்கள். இனிமேலாவது உண்மை தொண்டர்களை விலை பேசுவதை நிறுத்துங்கள். உங்கள் கைக்கூலிகளை வைத்துக்கொண்டு நீங்கள் நடத்தி வரும் நாடகத்திற்கு இப்போது ஒரு உயிர் பலி போயிருக்கிறது.

அதிமுகவின் விசுவாச தொண்டர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலே பங்கு, பணத்திலே பங்கு, கொள்ளையிலே பங்கு என்று நீங்கள் கூத்தடிக்கிற இந்த கொடுமையை, கண்றாவி காட்சிகளை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் விசுவாச தொண்டன் தம்பி மகேந்திரன் தன் உயிரை தியாகம் செய்திருக்கிறார். ஆட்சியும், அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக இருக்காது முதல்வர் விஜய். காலம் மாறும், காட்சிகள் மாறும், ஆட்சிகள் மாறும். மகேந்திரன் போன்ற கோடிக்கணக்கான விசுவாச தொண்டர்களை கொண்டிருக்கின்ற எடப்பாடி பழனிசாமி தலைமை மீண்டும் எழுகிற காலம் வெகு தொலைவில் இல்லை. ஆகவே கோடிக்கணக்கான மகேந்திரன் போன்ற விசுவாச தொண்டர்கள் கொதித்தெழுந்து உணர்ச்சி பொங்கினால் என்ன நடக்கும் என்று எங்களால் சொல்ல முடியவில்லை. அதிமுக தொண்டர்களின் உணர்ச்சியை இனியும் தூண்டி விடாதீர்கள். இப்போதாவது நீங்கள், இந்த அதிகாரம், ஆட்சி, பதவி, பட்டம் என்று நடத்துகிற அந்த கூத்துகளுக்கு எல்லாம், அந்த கூப்பாடுகளுக்கு எல்லாம் முடிவுரை எழுதுங்கள். தடை ஏற்படுத்துங்கள். இல்லை என்றால் விளைவுகள் விபரீதமாகப் போகும்.

அதிமுக சந்திக்காத வெற்றியும் இல்லை, பின்னடைவும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலே நாம் மீண்டும் எழுவோம். சந்தேகம், கவலை, வருத்தம் வேண்டாம். அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு. நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது, அங்கு சிரிப்பது யார்? அழுவது யார் என்பது தெரியும். அப்போது. ஆகவே போர்க்களத்திலே எதை இழந்தாலும் நாம் நம்பிக்கையை இழக்கக்கூடாது. நம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு, விசுவாசம், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மலரும்.

உயிரை மாய்த்துக் கொள்வது தீர்ப்பு அல்ல. உனக்கு கடமைகள் காத்துக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலே மக்கள் சேவையே, மகேசன் சேவை என்று உனக்காக கதவுகள் திறக்கப்பட இருக்கிறது. நீ விண்ணுலகம் சென்று விட்டாய் . உன் ஆன்மா இறைவனின் காலடியில் இளைப்பாறட்டும், சாந்தி அடையட்டும். இவ்வாறு பேசியுள்ளார்.

Related Stories: