கோவை: தமிழக பாஜவின் முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வரும் ஜூன் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சட்டமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு அரசியல் நகர்வுகளுக்கு பிறகு அண்ணாமலையின் இந்த ஆண்டு பிறந்தநாளை கோவையில் உள்ள அவரது ஆதரவாளர்களும், பாஜ தொண்டர்களும் கொண்டாட தயாராகி வருகின்றனர். தவிர, அண்ணாமலை தனது பிறந்த நாளின் போது புதிய கட்சியை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், பாஜவின் முன்னாள் கோவை மாநகர் தலைவர் உத்தம பாலாஜி ராமசாமி, தனது உத்தம் பவுண்டேஷன் அமைப்பு சார்பில் கோவை மாநகர் முழுவதும் அண்ணாமலையை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டி உள்ளார். சிங்காநல்லூர், அவிநாசி சாலை உள்ளிட்ட மாநகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. அதில், ‘‘எங்கள் தலைவா தலைமை ஏற்க வா’’ , ‘வையத் தலைமை கொள்’என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டு, அண்ணாமலையின் படங்களுடன் ஒட்டப்பட்டு உள்ளது.
தமிழக அரசியலில் அண்ணாமலை மீண்டும் முழு வீச்சில் தனது தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்த வேண்டும் என்ற தொண்டர்களின் நீண்ட நாள் ஆதங்கத்தையும், எதிர்பார்ப்பையும், வெளிப்படுத்தும் வகையில் இந்த வாசகங்கள் அமைந்து உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.கோவை நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டது முதலே கோவை மாவட்ட தொண்டர்களுக்கும், அவருக்குமான பிணைப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், ஜூன் 4ம் தேதி அவரது பிறந்தநாளை ஒட்டி கோவையில் ஒட்டப்பட்டு உள்ள இந்த தலைமை ஏற்க வா போஸ்டர்கள், சமூக வலைதளங்களிலும் அண்ணாமலையின் ஐடி விங் மூலமாக டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தவிர, அண்ணாமலை தனது பிறந்த நாளின் ேபாது புதிய கட்சி துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
