சென்னை: கொஞ்சம் டைம் கொடுங்கள் என்று முதல்வர் விஜய் சொல்கிறார். தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன் கூறியுள்ளார். திமுக மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: முதல்வர் விஜய் திருச்சியில் ஒரு கூட்டத்தை கூட்டி டோக்கன் கொடுத்து, கியூ ஆர் கோடு அளித்து மக்கள் சந்திப்பு என்று சொல்லியிருக்கிறார். பத்திரிகையாளர்கள் எத்தனையோ முறை பேட்டிக்காக அவரிடம் மைக்கை நீட்டியிருக்கிறார்கள். அவர் கொஞ்சம் நிறுத்தி நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வாரா? என்று நானும் பார்த்து கொண்டே தான் இருக்கிறேன். அதே மாதிரி ஒரு சம்பவமும் நடக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.
முக்கியமாக, தமிழக முதல்வர்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பிரதமரை போய் பார்த்து விட்டு வந்த பின்னர், அண்ணா காலத்தில் இருந்து கலைஞர், எம்ஜி.ஆர்., அம்மையார் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும், மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு முதல்வராக பொறுபேற்ற பிறகு மோடியை சந்தித்த பின்னர், தமிழ்நாடு கோரிக்கைகளை எல்லாம் கேட்டு பத்திரிகையாளர்களை சந்திப்பார். பத்திரிகையாளர் கேட்கும் கேள்விக்கு பதில்கள் சொன்ன வழக்கம் உண்டு. ஆனால், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்காமல் அவசரம், அவசரமாக காரில் புறப்பட்டு சென்ற முதல்வர் விஜய். மக்களை சந்திக்காமல் இருக்கிறோம். இன்றைக்கு திருச்சியில் வந்து ஒரு நிகழ்ச்சியை பண்ணியிருந்தார். அதில் மக்களை பார்த்து கேட்கிறார். அவர் தமிழ்நாட்டு முதல்வராக பேசினாரா? தவெக தலைவராக பேசினாரா? என்ற பெரிய குழப்பம் இருக்கிறது.
முதல்வராக பொறுப்பேற்று கொண்டு மேடையில் பேசும் போது, ஆளுங்கட்சியாக இல்லாத போது தேர்தல் பிரசாரத்தில் என்ன யுத்திகளை கையாண்டிங்களோ?. அதே முறையை சொல்கிறார். பொறுப்பு அவரிடம் இருக்கிறது. மக்கள் அதிகாரம் கொடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு நான் என்ன பண்ண போறேன் என்று சொன்னால் கேட்கலாம். ஆனால் திருப்பியும் திமுக தலைவரையும், முன்னாள் அவரை சிஎம் சார் என்று சொன்னார். இப்போது ஸ்டாலின் என்று விஜய் புலம்பிக்கொண்டு இருக்கிறார்.
விஜய்க்கு நல்லா தெரியும். எங்களுடைய திரும்பின மேடை தான் எங்களுடைய பிரசார மேடை. எங்கள் வரலாற்றை எல்லாம் கொஞ்சம் படித்து இருந்தால் தெரிந்து இருக்கும். ஸ்கிரிப்ட் எழுதி இருந்து படித்ததால் அவருக்கு தெரிந்து இருக்காது. 6 மாதம் டைம் கொடுக்கிறீங்க என்று சொன்னீங்க. அதுக்குள்ள எதிர்க்கட்சி பிரசாரத்தை ஆரம்பித்து விட்டிர்களே என்று. மக்கள் எல்லாம் ரோட்டில் எப்படி அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். எந்த போராட்டத்தை பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என்று பாருங்கள் அண்ணா.
மாதம் மின்சார கட்டணம் முறையை கொண்டு வருவோம் என்று சொன்னீங்க. 200 யூனிட் இலவசம் என்று சொன்னீங்க. ஆனால், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 யூனிட் தொடரும் என்று சொல்றீங்க. இப்படி தொடரும் தொடரும் என்று சொல்வது திமுக ஆட்சியின் சாதனைகளை தான். நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள். நான் ஆட்சிக்கு வந்த மறுநாள் பாலியல் குற்றங்கள் தீர்ந்து விடும் என்று சொன்னீங்க. கிட்டத்தட்ட ஒரு மாத காலத்தில் எத்தனை பாலியல் வன்கொடுமைகள். எத்தனை ஆணவ படுகொலை நடந்து கொண்டே இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் வகையில் உள்ளது.
ஆனால், நீங்கள் என்ன சொல்றீங்க. கொஞ்சம் டைம் கொடுங்கள் என்று. பரவாயில்லை எங்களுடைய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் குரல் எழுப்பினார். எதிர்க்கட்சி தலைவர் இந்த போடு போடுகிறார். நம்முடைய முதல்வர் நல்லா டயலாக் பேசுவாரே, ஆனால் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு சட்டமன்றத்தில் ஏன் அமைதி காத்தார் என்று வாக்களித்த மக்கள் கேட்கிறார்கள். இப்போ சோபா மாடல் சந்தி சிரிக்கிறது. அதிமுக எம்எல்ஏக்கள் எல்லாம் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் சேருகிறார்கள். எதனால் சேருகிறார்கள். எதற்காக சேருகிறார்கள். இது குதிரை பேரம் இல்லையா?. விவசாயிகள் எல்லாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உங்கள் தேர்தல் அறிக்கையில் அனைத்து விவசாயிகளின் கடன் ரத்து என்று சொல்லிவிட்டு, சிறுகுறு விவசாயிகளுக்கு மட்டும் தான் கொடுப்போம் என்றும், ஏக்கர் வரம்பு கொடுக்கிறீர்கள். கலைஞர் 2006ல் விவசாயிகள் கடனை எப்படி ரத்து செய்து இருக்கிறார் என்று பாருங்கள். 7 ஆயிரம் கோடியை எப்படி ரத்து செய்தார் என்று பாருங்கள். உங்கள் நிர்வாக சீர்கேடு பற்றியோ? நிர்வாகம் தன்மை பற்றியோ டைம் கொடுப்போம் என்றார். ஆனால், நீங்கள் ஆணவத்துடன், அதிகாரத்துடன் வந்து மக்கள் சந்திப்பில் எங்களை விமர்சித்துள்ளீர்கள். திமுக என்பது உடன் பிறப்பு சக்தி. உடன் இருப்பு சக்தி. தமிழ்நாடோட பாதுகாவலோனோட சக்தி. தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக முன்னேற்றியது. அதிகமான முதலீடுகள் ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக எப்போதும் குரல் எழுப்பும் திமுக இருக்கிறது. நாங்கள் தான் தமிழ்நாட்டின் உண்மையான சக்தி. இவ்வாறு அவர் கூறினார்.
