×

‘விவசாயத்தை விட விளையாட்டு கடினமானது’ அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

திருப்பூர்: சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விவசாயத்தை விட விளையாட்டு கடினமானது என பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி வெளியிட்ட அறிக்கை: நாட்டின் மக்களுக்கு உணவளிப்பது முக்கியமா? அல்லது விளையாட்டா?.

நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பஞ்சம், பசி, பட்டினியால் வாடக் கூடாது என்பதற்காகவே, இயற்கைச் சீற்றங்களான மழை, புயல், வெள்ளம், வாட்டி வதைக்கும் வெயில் என அத்தனையையும் தாங்கி விவசாயிகள் உழைத்து வருகின்றனர். மீள முடியாத கடன் சுமை மற்றும் அதன் காரணமாக ஏற்படும் தற்கொலைகள் போன்ற கொடூரமான வாழ்வாதாரப் போராட்டங்களையும் தினசரி எதிர்கொண்டு வருகின்றனர்.

தேர்தலின் போது பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, விவசாயிகளின் வாக்குகளைப் பெற்றுவிட்டு, பின்னர் ஏமாற்றம் என அத்தனையையும் சகித்துக் கொண்டு, உணவு உற்பத்தியை ஒருபோதும் நிறுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய கடுமையான சூழல்களுக்கு மத்தியில் உழைக்கும் விவசாயியைவிட, விளையாட்டுதான் கடினமானது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.அதேநேரம் விளையாட்டு வீரர்களை மதிக்கிறோம். விவசாயிகளின் வாழ்வாதார உழைப்பை குறைத்து மதிப்பிடுவதை ஏற்க முடியாது. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Farmers' Association ,Minister ,Aadhav Arjuna ,Tiruppur ,Chennai ,Sports Minister ,Tamil Nadu Farmers' Association ,President ,Eesan Murugasamy ,
× RELATED முன்னேற்பாடு நடவடிக்கைகளில் கடும்...