×

ரூ.1 கோடி கேட்டு முதியவர் காரில் கடத்தல்: தோட்டத்தில் அடைத்து வைத்து மிரட்டல்; தனிப்படை அமைத்து மூவருக்கு போலீஸ் வலை

களக்காடு: நெல்லை மாவட்டம், களக்காடு அருகே செட்டிமேட்டை சேர்ந்தவர் ஜெகன் சாலமோன். இவர் சேரன்மகாதேவி அருகே ஒரு கிறிஸ்தவ சபையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரை திடீரென சபை நிர்வாகிகள் பணி நீக்கம் செய்தனர். இதற்கு கோவிலம்மாள்புரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (79) தான் காரணம் என்று கருதினார். இதனால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. எனினும் அவரிடம் நண்பர் போலவே பழகி வந்துள்ளார்.

சுப்பிரமணியன் டோனாவூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் கணக்கராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் கடந்த 27ம் தேதி ஜெகன் சாலமோன், தனது வீட்டில் ஜெபம் நடப்பதாகவும், அதில் கலந்து கொள்ள வருமாறும் சுப்பிரமணியனுக்கு அழைப்பு விடுத்தார். இதை நம்பி அவரது வீட்டிற்கு சென்றார். இதனைதொடர்ந்து ஜெகன் சாலமோன் உள்பட 3 பேர் சேர்ந்து சுப்பிரமணியனை ஒரு காரில் திசையன்விளைக்கு கடத்திச் சென்றனர்.

அங்குள்ள ஒரு தோட்டத்தில் அவரை அடைத்து வைத்து, ரூ.1 கோடி தந்தால் தான் விடுவிப்போம் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து பதறிய சுப்பிரமணியன் தனது குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அவரது குடும்பத்தினரும் ஜெகன் சாலமோன் கூறியபடி அவரது நண்பர் வீட்டில் ரூ.5 லட்சத்தை முதற்கட்டமாக கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவில் சுப்பிரமணியன் தோட்டத்தில் இருந்து தப்பி ஓடி வந்து திருக்குறுங்குடி போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் ஜெகன் சாலமோன் உள்பட மூவர் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர். ரூ.1 கோடி கேட்டு, முதியவர் கடத்தப்பட்ட சம்பவம் களக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kalakkadu ,Jagan Solomon ,Settimettu ,Kalakkadu, Nellai district ,Christian ,Cheranmahadevi ,Subramanian ,Kovilammalpuram… ,
× RELATED முன்னேற்பாடு நடவடிக்கைகளில் கடும்...