சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 27 நாட்களுக்கு பிறகு சொந்த ஊரான சேலத்திற்கு வந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அவருக்கு மாவட்ட செயலாளர் பாலு தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
எம்எல்ஏக்கள் வெங்கடாசலம், உஷாராணி, மாஜி எம்எல்ஏக்கள் பாலசுப்பிரமணியம், செல்வராஜ், சித்ரா, மகளிரணி செயலாளர் ஜமுனாராணி, வெங்கடலட்சுமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வரவேற்றனர். அதே நேரத்தில் விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். மாஜி மந்திரிகளான விழுப்புரம் சி.வி.சண்முகம் எம்எல்ஏ, புதுக்கோட்டை விராலிமலை தொகுதி எம்எல்ஏ விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடிக்கு எதிரான முடிவில் இருக்கின்றனர்.
இவர்களது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அதே போல திருச்சி, நாமக்கல் மாவட்ட புதிய நிர்வாகிகளும் சந்தித்து பேசினர். தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு ஒருநாளுக்கு முன்பாக (3ம் தேதி) எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து சென்னை சென்றார்.
அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியும் பறிபோனது. இவருக்கு எதிராக வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் எம்எல்ஏக்கள் வெளியேறி, தவெகவுக்கு வாக்களித்தனர். அந்த பிரச்னைகளை எல்லாம் சரிசெய்த அவர், 27 நாட்களுக்கு பிறகு சேலத்திற்கு வந்துள்ளார். சேலத்தில் 3 நாட்கள் தங்கியிருக்க அவர் முடிவு செய்துள்ளார். இடைப்பாடி தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
* வாக்காளர்களுக்கு நன்றி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசியதாவது: இடைப்பாடி தொகுதியில், வாக்காளர்கள் சுமார் 98,600 வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாதம் பணிந்து, எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல், மேட்டூர் மற்றும் சங்ககிரி, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி, ஓமலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும், அதிமுக வெற்றி பெறுவதற்கு உழைத்த நிர்வாகிகள் தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
