×

போலீஸ் தாக்கிய மனஉளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

சமயபுரம்: மண்ணச்சநல்லூர் அடுத்த பாளையநல்லூரை சேர்ந்தவர் ஸ்ரீராம் (22). செல்போன் கடை ஊழியர். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, ஸ்ரீராம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ஸ்ரீராமின் தற்கொலைக்கு வாத்தலை போலீசாரே காரணமென கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை மண்ணச்சநல்லூர் கடைவீதியில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 20ம்தேதி அதிகாலை 3.30 மணியளவில், ஸ்ரீராமின் வீட்டிற்கு சென்ற வாத்தலை போலீசார், விசாரணை என்ற பெயரில் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த மனஉளைச்சல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீராம் மரணத்திற்கு வாத்தலை போலீசாரே காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

ஜீயபுரம் டிஎஸ்பி கதிரவன் தலைமையிலான போலீசார், ஸ்ரீராம் குடும்பத்தினரிடம் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். காவல் துறையினரின் பேச்சில் திருப்தியடையாத உறவினர்கள், மீண்டும் நொச்சியம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசார் மீண்டும் மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் களைந்து செல்லவில்லை. பின்னர் மறியலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீஸ் வேனில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

Tags : Samayapuram ,Sriram ,Palayanallur ,Mannachanallur ,
× RELATED முன்னேற்பாடு நடவடிக்கைகளில் கடும்...