சிக்கலைத் தீர்க்கும் சிக்கல் சிங்காரவேலன்

தேவர்களை இம்சிப்பதையே தனது வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் கொண்ட சூரபத்மனை கண்டு யாவரும் அஞ்சிநடுங்கினர். மயில்மீதமர்ந்து மாமறை உணர்த்தும் ஞானக் கொழுந்தின் உச்சியில் அமர்ந்திருந்தார் முருகப்பெருமான். தேவர்கள் படும் இன்னலை அறுக்க வேறொரு நாடகம் அங்கு அரங்கேறியது.
சூரபத்மனை நோக்கிச் சென்ற கந்தப்படை அவனை எச்சரித்தது. அந்த பாலகனுக்கு நான் பயப்படவேண்டுமா. விலகிச் செல்லுங்கள் என்றான்.
குமரப்படை, அது ஞானசக்தி. அதிகூர்மையானது. வெட்டி வீழ்த்தினால் இருகூறாவாய். இத்தோடு உன் அட்டூழியத்தை நிறுத்திக்கொள் என்றனர். மாயையை ஆடையாக அணிந்தவன் சூரபத்மன். ஜாலங்கள் பல செய்து போர் நிகழ்த்துவான். எளிதில் எதிரிப்படையை வென்று விடும் வல்லமை படைத்தவனாக இருந்தான்.
சூரபத்மன் முருகப்பெருமானோடு போர் செய்யத் துணிந்தான். மாபெரும் தேரேறி பிரபஞ்சத்தின் வாயிலை அடைத்தான். குமரன் கணைகள் தொடுக்க வாயில் தகர்ந்தது. அரக்கக்கூட்டத்தை கண்களால் பார்க்க பொசுங்கிச் சாம்பலானார். சூரபத்மன் ஆகாயத்தில் நிறைந்து போர் செய்தான். பறவையாக மாறினார். முருகன் வாளால் இறக்கையை வெட்டி வீழ்த்தினார். தொடர்ந்து மாய்ந்து மாய்ந்து பல நூறு விதங்களில் யுத்தங்கள் செய்தான், சூரபத்மன். அநாயசமாக அதைச் சிதறடித்தார் குமரப்பெருமான். சட்டென்று கருணை முகங்கொண்டு சூரபத்மனைப் பார்த்தார். யாருக்கும் கிடைக்காத விஸ்வரூபதரிசனம் காட்டினார். சூரபத்மன் ஒரு கணம் எல்லாவற்றிலும் ஞானவானாக, செம்பொற்சோதியாக நிறைந்திருந்த குமரக்கடவுளைப் பார்த்தான். திகைத்தான். கைகூப்பித் தொழுதான். குமரன் சட்டென்று பாலகனாக மயில்மீதேறியவுடன் அவன் மீண்டும் அறியாமையால் சூழப்பட்டான். இவனை மாற்றுவது கடினமென்றறிந்தார் கந்தர். மல்லிகை வனத்தில் மலர்ந்திருந்த தன் தாயைக் காணப் புறப்பட்டார், பாலமுருகன்.
மல்லிகை வனத்தில் அருள் மணம் பரப்பி அமர்ந்திருந்த தன் தாயின் திருவடிகளைத் தொழுதார். ஓடோடி வந்த சிறுவனின் மீது முத்து முத்தாக வியர்வைத்துளிகள் பூத்ததைப் பார்த்தாள், பார்வதியன்னை. மெல்ல அதை ஒற்றி எடுத்தாள். கருணைபொங்கும் விழிகளுடையவள் தன் அன்புப் பாலகனை கூர்ந்து நோக்கினாள். சிங்காரனின் முகம் ரத்னமாக ஜொலித்தது. அவளின் அருட்கண்களிலிருந்து பேரண்டமாளும் பெருஞ்சக்தி விழிவழியே அம்பாகப் பாய்ந்தது. அதன் கூர்மை யாவற்றையும் சிதறடிக்கும் வல்லமையை தனக்குள் கொண்டிருந்தது. அழகிய சிங்காரனின் கைகளில் அமர்ந்தது. ஒளிவீசும் வேலை விழிவிரியப்பார்த்தவன் பிரமித்தான்.
வேல்நெடுங்கண்ணித் தாயே என அவள் பாதத்தில் வீழ்ந்து துதித்தான். போர்க்களம் நோக்கி ஓடினான். வேலை அவன் பெருமார்பை நோக்கி வீசினான். அது சூரபத்மனின் மார்பைப் பிளந்தது. இருகூறாக்கியது. தாயளித்த ஞானவேல் சூரபத்மனை ஞானவானாக்கியது. சிங்காரவேலனாக கந்தக்கடவுள் அருட்கோலம் பூண்டார். சிங்காரவேலனின் கொடியாகவும், வாகனமாகவும் தாமிருக்க வரம் கோரினான், சூரபத்மன். அவர் சரியென்றார். சூரன் கொடியேறி படர்ந்தான். ஞானக்காற்று அவனை நான்குபுறமும் இதமாக தழுவியபடி இருந்தது. சிக்கலில் வேல்வாங்கியவன் இத்தலத்தில் தனிச்சந்நதிகொண்டு அழகு காட்டினான்.
இன்றும் இத்தலத்தில் பிரதான நாயகரான நவநீதேஸ்வரசுவாமி எனும் வெண்ணைப்பிரானுக்கு இணையாக அமர்ந்து அருள்பாலிக்கிறார், சிங்காரவேலவர். அது தவிர வைகுந்தவாசன் கோலவாமனப் பெருமாள் எனும் திருநாமத்தோடு இத்தலத்தில் சேவை சாதித்தருளுகிறார். மகாபலியை அழித்து அவன் அகங்காரத்தைச் சிதைக்கவேண்டி சிக்கல் நவநீதேஸ்வர ஸ்வாமியை நோக்கி தவமியற்றினார் இப்பெருமாள். அவனருளால் மூவடியால் இப்பேருலகம் அளந்தார். அவதாரமாகத் திகழ்ந்தார். ஆதலால், இத்தலத்திலேயே அவருடன் சேர்ந்து இவரும் அருட்கோலம் காட்டி யருளுகிறார்.
இன்னும் பல புராணப் பெருமை கொண்ட இக்கோயிலை மெல்ல வலம் வருவோமா. சிவனின் அக்னிக் கொழுந்து அகத்தில் சுடர்விட்டெரிய அத்தணலை கோயிலாக மாற்றிய கோச்செங்கணான் அமைத்த எழில் மாடக்கோயிலே சிக்கல் சிங்காரவேலவன் ஆலயம். கோயிலுக்கு மேற்கில் உள்ளதே காமதேனு பொழிந்த பாற்குளம் தீர்த்தம். இதை வடமொழியில் ஷீரபுஷ்கரணி என்கிறார்கள். இதுபோன்று கயாதீர்த்தம், இலக்குமி தீர்த்தம், அம்மா குளம், விருத்த காவேரி எனும் ஓடம்போக்கியாறு என பலதீர்த்தங்கள் இத்தலத்திற்கு அமைந்திருப்பது இதன் விசேஷம். இத்தலத்தின் விருட்சம் மல்லிகை. ஞானசமபந்தரால் பல பதிகங்கள் பெற்ற தலம்.
வண்டு பாடும் சோலைகளும், செந்தண் பூம்பொழிற் சிக்கல் என்கிறார் சம்பந்தப்பெருமான். ஏழுநிலை மாடக்கோபுரம் சிவாலயத்திற்கும், மூன்று நிலை மாடம் பெருமாள் ஆலயத்திற்குமாக திகழ்கிறது. கோபுரத்திற்குள்ளே நுழைய வசந்தமண்டபம் உள்ளது. கார்த்திகைத் திருநாட்களில் சிங்காரவேலவர் இங்கு எழுந்தருளுவார். இங்குள்ள நிலைக்கண்ணாடி முன்பு அசைந்தாடும் காட்சி காண கண்கோடி வேண்டும். கந்தனின் திருவிளையாடல்களை பல வண்ண ஓவியங்களில் தீட்டியிருக்கிறார்கள். ராமாயணத்தின் பல்வேறு கட்டங்களை சுதைச்சிற்ப வடிவில் தீட்டியிருக்கிறார்கள். அடுத்து மூலவரான நவநீதேஸ்வரரின் சந்நதி நோக்கி நகரும்போது அழகிய கலைத்திறனுள்ள சிற்பங்களை தூண்களில் செதுக்கியிருக்கிறார்கள். சற்றே மேலே பார்க்க மாடகோயிலாக விளங்கும் படிகளேறி மூலவரை அடைகிறோம். படிகளுக்குப் பக்கத்தில் சுந்தரகணபதியின் சந்நதி உள்ளது. கட்டுமலையின் தேவகோட்டம் என்றழைக்கப்படும் படிகளைக் கடந்து சென்றால் நேரே சோமாஸ்கந்தர் சந்நதி உள்ளது. இங்கு மரகதலிங்கமுள்ளதால் மரகதவிடங்கர் என்ற பெயரும் இதற்குண்டு.
சோமாஸ்கந்தருக்குப் பக்கத்தில்தான் நவநீதேஸ்வரர் எனும் வெண்ணைப்பிரான் அருளாட்சி செய்கிறார். வெண்ணெய்க்கு வடமொழியில் நவநீதேஸ்வரர் என்றும் மாறாத ஆத்மசக்தி என்றும் இருபொருளுண்டு. வசிஷ்டர் ஞானக்கரங்களில் வளைந்தெழுந்தது. வெண்ணையப்பரின் அருட்கிரணங்கள் நெருங்கியோரை தென்றலாக வருடிச் செல்லும். வாழ்வு முழுதும் வெண் ஒளியாக வெண்ணையப்பரின் அருளொளி தொடர்ந்து வரும். மூலவரின் சந்நதிக்கு அருகேயே சிக்கல் நாயகன் சிங்காரவேலவன் சிருங்காரமாக எழுந்தருளியுள்ளார்.
பேரழகும். ஞானப்பூர்த்தியும் கொண்ட திருமுகம். தாய் ஈந்தளித்த ஞானவேலை கையிலேந்தி எப்போதும் காப்பேன் கவலைப்படாதீர்கள் என்று சொல்லும் கருணை காண்போரை நெகிழ்த்தும். வள்ளியும், தெய்வானையும் அருகில் நின்றருள ராஜகம்பீரத் தோற்றம் காட்டும் சிங்காரனைக் காண மனம் உறுதி பெறும். சிக்கலான சம்சார வாழ்வினை களைந்து தன்னிலவாகத் திகழும் ஆத்மசொரூபத்தை காட்டியருளுவான் வேலவன். இன்பம், துன்பம் என கணத்திற்கு ஆயிரம் இழைகளைக் கொண்ட சிக்கலான வாழ்வுதனை ஞானவேல் காட்டி அறுப்பான் சிங்காரநாயகன்.
இன்றும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டியை முன்னிட்டு பத்து நாட்கள் விழா நடைபெறும். அதில் ஐந்தாம்நாள் தேர்த்திருவிழா நிகழும். தேர்விழா முடிந்து வேலவர் அம்மையிடமிருந்து வேல் வாங்கி மலைக்குச் சென்றபின் சிலமணிநேரம் வியர்வைத் துளிகள் காணப்படும். இதை யாவரும் கண்ணுறலாம். வெண்பட்டால் ஒற்றி ஒற்றி எடுக்க வியர்வை சுரந்து கொண்டே இருப்பது பார்க்க மயிர்க்கூச்செறியும். வியர்வை படரும் சில மணி நேரம் அச்சந்நதியை ஏதோவொரு பெருஞ்சக்தி அடைத்து ஆக்ரமிப்பதை அறியலாம். இடையறாத ஒரு பரபரப்பும், பேரதிர்வுகளும் எல்லோரையும் அசைத்துக்கொண்டிருப்பதை கண்கூடாக தரிசிக்கலாம். இப்பேர்ப்பட்ட தன்னிகரற்ற சந்நதியில் வியர்த்தெழுந்து, வேல் அளித்த அம்பாளின் சந்நதியை தரிசிப்போம்.
அழகுப் பிள்ளைக்கு வேல் கொடுத்து வெற்றியைத் தந்தவளான வேல்நெடுங்கண்ணி கருணை பூத்தருளுகிறாள். வடமொழியில் சத்தியாயதாட்சி என்று பெயர். அபய வரதஹஸ்தம் காட்டி இனிய வாழ்வை வளரச் செய்கிறாள். விழிக்கே அருளுண்டு என்பதுபோல, இவளின் விழி நெடுங்காவியம் படைத்தது. வேல் போன்ற கூரிய விழிகளால் வினைகளைத் துடைத்தழிக்கிறாள். பிள்ளையின் அங்கத்தில் பூத்த வியர்வையை ஒற்றி எடுத்தவள் நம் வற்றிய வாழ்வில் குளிர்சாரல் பரவச் செய்வாள். வேல் போன்ற நெடுங்கண்ணினை உடையாள் ஜென்மாந்தரமாக நம்முடன் நெடுந்தூரம் வந்தருளுவாள் எனில் ஐயமில்லை. அமுதக்கூர் விழிகளின் ஆனந்தத்தில் நனைந்தெழுந்து கோயில் பிராகாரம் வலம் வருவோம்.
மாடக்கோயிலின் முழுப் பிரமாண்டத்தையும் பிராகார வலத்தின்போது காணலாம். கோயிலின் கோபுரம் முழுவதும் புராணக்காவியங்களை செதுக்கியிருக்கிறார்கள். முழுதும் கற்றளியாக அல்லாது பெரும்பான்மையான கற்றளியாகத் திகழ்கிறது, இக்கோயில். வலமிருந்து நகர்ந்து செல்கையில் காமதேனு ஈசனை வழிபடும் சிற்பமும், கைகுவித்து வணங்கும் ரிஷிகளின் முகத்தில் பொங்கும் ஆனந்தத்தையும் புடைப்புச்சிற்பத்தில் கொட்டியிருக்கிறார்கள். இதுவே தலவரலாறை விளக்கும் ஆதார பொக்கிஷம். கோயிலை வலமாக வரும்போதே சிறு வழியாக கோலவாமனப்பெருமாள் கோயிலுக்குச் செல்லலாம். தாயாரின் திருநாமம் கோமளவல்லித்தாயார். சேஷாசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம் யாவரையும் அருகில் அழைக்கும். அருளை அவர்கள் மீது வாரியிறைக்கும். வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இருகோயிலையும் வலம் வந்து வணங்கியெழ ஓர் ஞான ஊற்று கொப்பளித்துப் பொங்குவதை சுகமாய் உணரலாம்.
நாகப்பட்டினத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், திருவாரூரிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

Related Stories: