தூத்துக்குடியில் பயங்கரம்: மீனவர் வெட்டிக் கொலை

 

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நண்பர்களிடையே மது போதையில் ஏற்பட்ட தகராறில் மீனவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 3 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி தாளமுத்து நகர், ஆனந்த் நகரை சேர்ந்த முருகன் மகன் மாரிச்செல்வம்(21). இவர் மீது அடிதடி உள்ளிட்ட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே பகுதியை சேர்ந்தவர் சந்தனராஜ் என்ற சந்து(22). இவர் மீதும் அடிதடி வழக்கு உள்ளது. அண்ணா நகரை சேர்ந்தவர் புவனேஸ் குமார்(22). இவர் மீது 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே போல் தாளமுத்து நகரை சேர்ந்தவர் மரிய அந்தோணி ஜாய்சன்(22). நேரு காலனியை சேர்ந்தவர் ஹரிஹர சுதன்(22).

இவர்கள் அனைவரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்று இரவு தாளமுத்து நகர் நேரு காலனியில் உள்ள காலி இடத்தில் நண்பர்கள் அனைவரும் மது அருந்தியுள்ளனர். மது போதையில் இருந்த நண்பர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாரிச்செல்வம், சந்தனராஜை அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற 3 பேரும் சந்தனராஜுடன் சேர்ந்து மாரிச்செல்வத்தை தாக்கியதோடு, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சந்தனராஜ் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் விழுந்தார். இதையடுத்து அவர்கள் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரிச்செல்வத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாரிச்செல்வம் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தனராஜ் என்ற சந்து, மரிய அந்தோணி ஜாய்சன், ஹரிஹர சுதன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய புவனேஸ் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: