வீட்டுக்குள் புகுந்து பெண் வெட்டிக் கொலை: வாலிபர் கைது

சென்னை: திருவேற்காடு அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணை வெட்டிக் கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.  ஆவடி அடுத்த மேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி(40), கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கலைபவானி(35). இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன், 15 வயதில் ஒரு மகள் உள்ளனர். ரஜினி திருவேற்காடு அடுத்த காடுவெட்டி பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி வந்துள்ளார். ரஜினி பூ வியாபாரத்திற்கு சென்ற நிலையில், கலைபவானி வீடு கட்டும் பணிகளை கவனித்து வந்தார்.

அப்போது, அப்பகுதியில் துணிகளை அயர்ன் செய்யும் கடை வைத்திருந்த முருகன்(36) என்பவர் கட்டுமான பணியின் போது கலைபவானிக்கு உதவியாக இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கலைபவானி வீடு கட்டும் பணிக்கு முருகன் பல்வேறு வகையிலும் உதவி செய்து வந்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியுள்ளது.

இதற்கிடையே வீடு கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பு புதுமனை புகுவிழா நடத்தி, அந்த வீட்டிற்கு ரஜினி தனது குடும்பத்தினருடன் குடிவந்துள்ளார். பின்னர், கலைபவானி முருகனிடம் பேசுவதை தவிர்த்து, தொடர்பையும் துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் கலைபவானியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இதில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை முருகன், கலைபவானியின் வீட்டிற்கு சென்றார். அப்போது, இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன், கத்தியால் கலைபவானியை சரமாரியாக வெட்டினார். இதில், கலைபவானி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதையறிந்த முருகன் அங்கிருந்து பக்கத்து வீட்டு மாடிக்கு தாவிக் குதித்து தப்பிக்க முயன்றார்.

அப்போது மாடியிலிருந்து தவறி விழுந்து முருகனின் கால் எலும்பு முறிந்தது. இதற்குள் அங்கு வந்த பொதுமக்கள் முருகனை சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு காவல் நிலைய போலீசார், முருகனை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த கலைபவானி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருவேற்காடு காவல் நிலைய போலீசார், முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: