சேலம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 6வது முறையாக அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதனிடையே மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் கடந்த 15ம் தேதி பெட்ரோல், டீசல் விலை சராசரியாக ரூ.3 உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. கடந்த 12 நாட்களில் நேற்று 6வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 33 காசும், டீசல் லிட்டருக்கு 32 காசும் உயர்த்தப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.20 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.98 ஆகவும் உயர்ந்துள்ளது.
சேலத்தை பொறுத்தவரை நேற்று பெட்ரோல் விலை 64 காசும், டீசல் விலை லிட்டருக்கு 63 காசும் உயர்ந்தப்பட்டது. அதன்படி, பெட்ரோல் லிட்டர் ரூ.108.85க்கும், டீசல் ரூ.100.68க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 12 நாட்களில் நேற்று 6வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. கடந்த 12 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.53, டீசல் ரூ.7.70 என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால், அனைத்து ெபாருட்களின் விலையும் உயரும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
